கொட்டுச்சத்தம்"தப்புக்கொட்டு மணி வீடு இது தானே?"
வீட்டுக்கு வெளியே ஏதோ ஒரு குரல் தன் மகனின் பெயர் சொல்லி அழைப்பதைக் கேட்டு பூவாயி காண்டாவிளக்கை கையில் எடுத்துக்கொண்டு விளக்கின் சொற்ப வெளிச்சத்தில் தடுமாறி கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தாள்.
"யாரு சாமி இந்த ராத்திரி நேரத்துல?"
"மணி வீடு தானே இது?" வந்தவர் மீண்டும் கேட்டார்.
"ஆமா"
"மணி வீட்டுல இல்லியா?"
"பொழுது இருட்டுனா சாக்கனாங்கட பக்கமா ஒதுங்கிருப்பான். கழுதக் கெட்டா குட்டிச்செவுரு. வேற எங்க போயி தொலையப்போவுது. இன்னா சாமி விசியம்?"
"நாட்டாம வீட்டுல சாவு உழுந்துடுச்சு. தப்படிக்க மணிய கூட்டி வரச் சொன்னாங்க"
"ஐயோ பெரியவரு வூட்டுலியா, யாரு சாமி?" அதிர்ச்சி அவளது குரலின் விளிம்பிலேயே தெரிந்தது.
"ஐயாவோட அம்மா தான். ரெண்டு மாசமா இன்னைக்கோ நாளைக்கோன்னு இழுத்துகிட்டு கெடந்துச்சு. வடக்க இருந்த பொண்ணும் பேரப்புள்ளைங்களும் வந்து இன்னைக்கு பாலு ஊத்த, அப்டியே அடங்கி போச்சு"
"நல்ல சாவு தான். நீங்க போங்க சாமி, நா மணிய வரச் சொல்லுறேன்"
"அவன் ஒருத்தன் மட்டுமா தப்பு எடுத்துகிட்டு வந்துடப் போறான். கூட ரெண்டு மூணு பயலுவள கூட்டி வரச் சொல்லு. நாட்டாம வீட்டு சாவு, ஊரு மொத்தத்துக்கும் கொட்டுச் சத்தம் கேக்கணும்".
"சொல்லிடுறேன் சாமி"
"சீக்கிரமா வரச் சொல்லு. இப்போவே கொட்டு ஆரம்பிச்சிடணும். அவன் பாட்டுக்கு காலையிலே பொழுது விடிஞ்சி வந்து நிக்கப் போறான்" நாட்டாமை வீட்டு சாவுக்கு தாரை தப்பட்டைக்கு சொல்ல வந்தவர் ஒளியை உமிழத் தயங்கும் டார்ச் வெளிச்சத்தில் இருட்டை விலக்கி நடந்து சென்றார்.
பூவாயிக்கு வீட்டை விட்டு இந்த நேரத்தில் தனியே சென்று சாக்கனாங்கடையில் இருக்கும் மகனை அழைக்கத் தயக்கம். காரணம், இன்றோ நாளையோ என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு இருக்கும் நிறைமாத கர்ப்பிணியான அவளது மருமகள் பேச்சிமுத்து. திருமணத்தின் போதே அப்பா இல்லை. திருமணம் முடிந்து சில மாதங்களில் அம்மாவும் இறந்துபோய்விட, பேச்சிமுத்துவிற்கு புகுந்த வீடே அவளது தாய்வீடும் ஆனது. பூவாயியும் தன் மருமகளை தன் மகளாகவே கவனித்துக்கொண்டாள். வயிற்றைப் பார்க்கும்போது அதிகம் தாங்காது என்று தோன்றியதால் தனியே விட்டுச் செல்ல அவளுக்கு பயமாக இருந்தது.
"ஏண்டீ, ஒம்புருசனுக்கு நாளு கெழம தெரியாதா? இன்னைக்குமா அந்த எழவெடுத்த சாக்கனாங்கட பக்கம் போவணும்"
"ஆமா, தொர என்னைக்கு போவாம இருந்திருக்காரு. இன்னைக்கு மட்டும் விசேசம். நா இருக்கேன் யத்தே, நீ போயி மாமன கூட்டி வா"
மருமகள் தனியே இருப்பதாக தைரியம் சொன்னாலும் பூவாயிக்கு மனசு கேட்கவில்லை. ஆனாலும் நாட்டாமை வீட்டுச் சாவுக்கு மணி போக வேண்டும். சரி நடப்பது நடக்கட்டும் என்று "பேச்சியம்மா, நீதாம்மா தொண இருக்கணும்" என்று மனதிற்குள் கடவுளை வேண்டிக்கொண்டு இருட்டிலேயே மகனைத் தேடிப் புறப்பட்டாள்.
பூவாயி பாதி வழி நடந்துகொண்டு இருக்கும்போதே "எம்பொண்டாட்டி புள்ளத்தாச்சிங்க, ரெண்டு பொட்டுக்கல்ல அள்ளிப் போடுங்க" என்று கிண்டலாக பாடியபடி மணி வருவது தெரிந்தது. கொஞ்சம் நெருங்கும்போது ஆடியபடி வருவதும்.
"எழவெடுத்தவனே, பொண்டாட்டி புள்ளத்தாச்சிங்கறது சுதி உள்ள ஏறுன பொறவு தான் தெரியுதாக்கும். நெறமாசக்காரி ஊட்டுல இருக்குறப்போ இப்புடி கொஞ்சக்கூட பொறுப்பில்லாம குடிச்சிட்டு வர்றியே"
"தன் வயிற பட்டினி போட்டு என்னுயிர வளத்தவளேஏஏஏஏஏஏஏஏஏஏஏ" தாயைப் பார்த்து மணி பாடத் துவங்கினான். மணிக்கு நல்ல கணீர் குரல். பாடிக்கொண்டே தப்பட்டை அடிப்பதில் கில்லாடி. அதுவும் கொஞ்சம் சாராயம் உள்ளே போய்விட்டால் பாட்டுக்கு கேட்கவே வேண்டாம். மணியின் பாட்டுக்காகவே தப்படிக்க வெளியூர்களில் இருந்துகூட சில சமயங்களில் சாவு வீட்டிற்கு கூட்டிப் போவது உண்டு.
"என்னப்பெத்த ஆத்தா, ஒம்புள்ள சந்தோஷத்துல குடிச்சிருக்கேன். இந்த மணிக்கு ஒரு மணிக்குட்டி பொறக்கப் போறான், அதுக்காக குடிச்சிருக்கேன். புள்ளப் பொறந்த ஒடனே பாரு, குடிக்கிறத நிறுத்திடுறேன்." தன் அன்பான மனைவிக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்ற சந்தோஷம் அவன் குரலில்.
"நாளை முதல் குடிக்க மாட்டேன், சத்தியமடி தங்கம். இன்னிக்கு ராத்திரி தூங்க வேணும், ஊத்திக்கிறேன் கொஞ்சம்" அடுத்தடுத்து பாடல்களாகவே பதில் வர ஆரம்பித்தது மணியிடம் இருந்து.
"தூங்கப் போறானாம் தூக்கம், இன்னிக்கு ஒந்தூக்கம் நாட்டாம வூட்டுல தான்"
"இன்னா விசியம், நாட்டாம வூட்டுல யார்னா புட்டுக்கிட்டாங்களா? இல்ல நாட்டாமயே புட்டுக்கிட்டாரா?" கேள்வியில் கிண்டல் தொனித்தது.
"நல்ல வார்த்த வாயில வராதா ஒனக்கு, நாட்டாமயோட அம்மா தவறிட்டாங்களாம். தப்பு கொட்ட ஒன்ன வரச் சொல்லி ஆளு வந்திச்சி".
"த, சும்மா பொலம்பாத. ஊருல எவனாவது புட்டுகிட்டா நா ஒக்காந்து அழணுமா? அப்பிடி அழணும்ன்னா தெனமும் அழணும். ஆமா, எங்க தெனமும் சாவு உழுது. தெனமும் எவன் வூட்டிலியாவது சாவு உழுந்தா கொஞ்சம் காசாவது கையிலே நிக்கும்."
"வாயக்கழுவுடா வந்தேறிக்கு பொறந்தவனே. அப்பனுக்கு தப்பாம பொறந்து வந்துருக்கு, எப்போ பாரு காசு காசுன்னு" பூவாயிக்கு கண்களில் கண்ணீர் தன்னை அறியாமல் வந்தது. மணியின் தந்தையும் "காசு காசு" என்று ஓடியவர் தான். எங்கே இறப்பு நடந்தாலும் தப்படிக்க போய்விடுவார். ஆனால், அவர் காசுக்கு அலைந்தது தனக்காக இல்லை, தன் மகனுக்காக. தன்னை போல அவனும் தப்பட்டை அடிக்காமல் பள்ளியில் படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், மணிக்கு தான் படிப்பு சுட்டுப் போட்டாலும் வரவில்லை. ஆறாம் ஏழாம் வகுப்புகளிலேயே இரண்டு முறையும் மூன்று முறையுமாக தவறி, தன் தகப்பன் இறந்த மறுநாளே அவரது தப்பட்டையை கையில் எடுத்துக்கொண்டான். மணிக்கு படிப்பு தான் வரவில்லையே தவிர தப்படிக்க நன்றாகவே வந்தது. "டகர டகர டகர டம்டம்டம்" என்று அவன் அடிக்கத் தொடங்கினால் இறப்பின் துயரம் மறந்து கூட்டம் அவனது தப்படியை கவனிக்கத் துவங்கிவிடும்.
"நீ மட்டுமா போவாத, ரெண்டு மூணு பேரா வரச் சொன்னாங்க. கணேசனையும் பாண்டியையும் கூட்டிட்டுப் போ"
"த, எந்த வூட்டுக்கு எத்தன பேரு கூட்டிக்கிட்டு போணா எவ்ளோ கறக்கலாம்ன்னு எனக்கு தெரியும். நீ போயி ஒம்மருமவள கவனி" என்று கூறிக்கொண்டிருக்கும்போதே வீடு வந்துவிட்டது.
"ஏபுள்ள பேச்சி, இந்தா மொளகா பச்சி. ரெண்டு எடுத்து திண்ணு, எம்புள்ள நல்ல காரசாரமா பொறப்பான்" என்று சாக்கனாங்கடை வாசலில் இருக்கும் செவிட்டுக் கிழவியிடம் வாங்கிய மிளகாய் பஜ்ஜியை மனைவிக்குக் கொடுத்தான் மணி.
"புள்ள நா நாட்டாமைய்யா வூட்டுக்கு தப்படிக்கப் போறேன். நீ பத்ரமா இரு" என்று மனைவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான். பேச்சிமுத்து கணவன் ஆசையுடன் வாங்கி வந்திருந்த மிளகாய் பஜ்ஜியை சாப்பிட ஆரம்பித்து இருந்தாள்.
"எலேய், நாளைக்கு பொழுது சாயறதுக்குள்ள வந்துடு. வயித்துப்புள்ளக்காரி இங்கே தனியா இருக்கா".
"வர்றேன் வர்றேன்" என்று சொல்லிக்கொண்டு துணியில் முடிந்து கட்டியிருந்த பறையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு பக்கத்து வீட்டில் இருந்த பாண்டி, கணேசனையும் கூட்டிக்கொண்டு நாட்டாண்மை வீட்டை நோக்கி நடந்தான்.
நாட்டாண்மையின் வீடு நெருங்கும்போதே அழுகுரல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டது. அக்கம்பக்கத்து சொந்தங்கள் வந்துவிட்டிருந்தனர். இறந்து போனது தொண்ணூறுகளை தொட்டவரானாலும் பிறந்த பிள்ளைகளுக்கு என்றும் தாய் தானே, நாட்டாண்மையே கசங்கிய பனியனுடன் கண் கலங்கி தான் இருந்தார்.
"எலேய் மணி, சேதி சொல்லி எவ்ளோ நாழியாச்சு, அன்னநட நடந்து வர்றியா நீ, சீக்கிரம் கொட்டு கொட்ட ஆரம்பி. ஆளுங்கல்லாம் வர ஆரம்பிச்சாச்சு. இன்னும் கொட்டு கொட்டாம இருந்தா என்ன அர்த்தம்" என்று அங்கே இருந்த ஒரு பெரியவர் அதட்ட ஆரம்பித்தார்.
"ஐயா, தோ ஆரம்பிச்சிட்டேன்." என்று கூறிக்கொண்டே சுள்ளிகளை கூட்டிச் சேர்த்து தீ உண்டாக்கி அதில் கொண்டு வந்திருந்த பறையின் தோல் பகுதியை காட்டி அங்கங்கே சிறிதாக தட்டி சுதி சேர்க்க ஆரம்பித்தான்.
"ஐயா, வர்ற வழியிலே ஒண்ணும் உள்ளுக்கு சேக்காம வந்துட்டேன், ஒரு டீ குடிக்கணும். காசு இருந்தா குடுங்க"
"மணி, நீ எந்த டீ குடிக்க காசு கேக்குறன்னு தெரியாதா, கையிலே காசு ஏறாம ஒன்னோட தப்பு குச்சிய தொட மாட்டியே"
"பெரியைய்யா வூட்டு சாவாச்சிங்களே, அடிக்கிற அடிக்கு ஊரு மொத்தமும் ஐயா வூட்டுக்கு வந்துட வேணாமா, அதுக்கு தான்யா" என்று பவ்யமாக கையை நீட்டி காசை வாங்கிக்கொண்டான்.
அடுத்த சிறிது நேரத்திலேயே அந்தக் காசு சாராயமாக மாறிவிட, பறையின் தோலும் தீயில் நன்றாக வாடி இருந்தது.
டகர டகர டகர டம் டகர டம் டகர டம், டம் டம் டம் டகர டம் டம் டம் டகர டம் டம் டம்
மணியின் பறையில் இருந்து வந்த சத்தம் ஊர் முழுக்கக் கேட்கத் துவங்கியது. பக்க வாத்தியங்களாக கணேசனும், பாண்டியும்.
மறுநாள் காலையிலே நாட்டாண்மையின் வீட்டில் கூட்டம் தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு வந்திருந்தது. கூட்டம் வர வர மணியின் கொண்டாட்டமும் அதிகம் ஆகியது. நாட்டாண்மையின் சம்பந்தி முறை உள்ளவர்கள் வாய்க்கரிசி கொண்டு வர, வந்த அனைவருக்கும் அவரவர் ஊர் பெயர் உறவுமுறை சொல்லி தப்படிக்க ஆரம்பித்தான். இடையிடையே தாயின் பெருமை சொல்லும் பாடல்களும் வந்துகொண்டே இருந்தது. இறப்பிற்கு வந்த எம்.எல்.ஏ, அக்கம்பக்கத்து ஊர் பெரியவர்கள் கொடுத்த காசு என்று மணிக்கு இன்று நன்றாகவே காசு சேர்ந்திருந்தது. காசு சேர சேர, தப்பட்டையின் ஓசையும் லயமும் கூடிக்கொண்டே இருந்தது.
மாலையில் அடக்கம் முடிந்து சுடுகாட்டில் இருந்து திரும்பி வந்துகொண்டு இருக்கும்போது தான் நிறைமாத மனைவி நினைவுக்கு வந்தாள். மணிக்கு பறையை கையில் எடுத்துவிட்டால் வீடு, உறவு, பசி எல்லாமே மறந்துபோகும். காசும் சாராயமும் வந்துகொண்டு இருந்தால் போதும், ஓயாமல் கொட்டுச்சத்தம் கேட்கும். மனைவியின் நினைவு வந்ததும் வழியில் இருந்த பூக்கடையில் கொஞ்சம் கதம்பம் வாங்கலாம் என்று சென்றான்.
"மாமோய், இன்னிக்கு தான் நெறையா காசு வந்துருக்குல்ல, அக்கா ஆசைக்கு மல்லிப்பூ தான் வாங்கிட்டு வாயேன்" என்றான் கணேசன்.
"அதுவும் சரி தான்" என்று நினைத்துக்கொண்டு மல்லிகைப்பூ நிறைய வாங்கிக்கொண்டு வீடு நோக்கி "எம்பொண்டாட்டி புள்ளத்தாச்சிங்க, ரெண்டு பொட்டுக்கல்ல அள்ளிப் போடுங்க" என்று பாடிக்கொண்டே நடந்தான்.
வீட்டு வாசலை நெருங்கும்போது "ஐயையோஓஓஓஓஓஓஓஓஓ இப்புடி பச்சப்புள்ளய தவிக்கவுட்டு போயிட்டியே ஆத்தா" என்று பூவாயியின் அலறல் கேட்டது.
தாயின் அலறல் கேட்டு வீட்டினுள் ஓடிப் பார்க்க அங்கே அவனது மனைவி பேச்சிமுத்து மரக்கட்டையாக கிடந்தாள். அருகிலேயே துணியில் சுற்றிய குழந்தை அழுகையுடன். குழந்தை வெளியில் வருவதில் சிக்கல் ஏற்பட்டு பேச்சிமுத்து இறந்துவிட்டிருந்தாள்.
"ஏ பேச்சியம்மா, நல்லபடியா பேரப்புள்ளய கையில குடுன்னு கேட்டதால பேரப்புள்ளய மட்டும் கையில குடுத்துட்டு எம்மவள கொண்டு போயிட்டியா" என்று பூவாயி அலறிக்கொண்டு இருந்தாள்.
மணி கையில் இருந்த மல்லிகைப்பந்தை மனைவியின் மேல் போட்டுவிட்டு குழந்தையைப் பார்த்தான். பிறந்தது அவன் ஆசைப்பட்ட மணிக்குட்டி தான்.
வெளியில் வந்த மணி, துணி முடிச்சில் இருந்த பறையை வெளியில் எடுத்து அடிக்க ஆரம்பித்தான்.
"எம்பொண்டாட்டி புள்ளத்தாச்சிங்க, ரெண்டு பொட்டுக்கல்ல அள்ளிப்போடுங்க"
டகர டகர டகர டம் டகர டம் டகர டம், டம் டம் டம் டகர டம் டம் டம் டகர டம் டம் டம்
மணியின் கொட்டுச்சத்தம் அவனது மணிக்குட்டியின் அழுகையோடும், தாயின் அலறலோடும் அந்தச் சேரியையும் தாண்டி கேட்கத் தொடங்கியது.
பி.கு: 2006ல் தேன்கூடு சிறுகதைப் போட்டிக்காக எழுதிய சிறுகதை. பரிசெல்லாம் கெடைக்கல ஹிஹி