தேன்கூடு-போட்டி: கொட்டுச்சத்தம்

நண்பர்களுக்கு வணக்கம். தேன்கூடு தளம் நடத்திய கடந்த இரண்டு போட்டிகளிலுமே கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் எனக்கே உரிய சோம்பலின் காரணமாக எனது படைப்பு முழு வடிவம் பெறும் முன்பாகவே போட்டி முடிந்து முடிவுகளும் வெளிவந்து விடும். அதனால் இந்த முறை நான் முந்திகொண்டேன்.

வெகுநாட்கள் இடைவெளிக்கு பிறகு எழுதிய கதை. குற்றம் குறைகள் இருப்பினும் அவற்றை மறந்து அடுத்த தேன்கூடு போட்டிக்கு பெயர் சூட்டும் பாக்கியத்தை எனக்கு தாருங்கள் (முதல் பரிசு நான் வாங்கணும்ன்னு நாசுக்காகச் சொல்கிறேன்).

இனி கதை......

கொட்டுச்சத்தம்



"தப்புக்கொட்டு மணி வீடு இது தானே?"

வீட்டுக்கு வெளியே ஏதோ ஒரு குரல் தன் மகனின் பெயர் சொல்லி அழைப்பதைக் கேட்டு பூவாயி காண்டாவிளக்கை(1) கையில் எடுத்துக்கொண்டு விளக்கின் சொற்ப வெளிச்சத்தில் தடுமாறி கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தாள்.

"யாரு சாமி இந்த ராத்திரி நேரத்துல?"

"மணி வீடு தானே இது?" வந்தவர் மீண்டும் கேட்டார்.

"ஆமா"

"மணி வீட்டுல இல்லியா?"

"பொழுது இருட்டுனா சாக்கனாங்கட(2) பக்கமா ஒதுங்கிருப்பான். கழுதக் கெட்டா குட்டிச்செவுரு. வேற எங்க போயி தொலையப்போவுது. இன்னா சாமி விசியம்?"

"நாட்டாம வீட்டுல சாவு உழுந்துடுச்சு. தப்படிக்க மணிய கூட்டி வரச் சொன்னாங்க"

"ஐயோ பெரியவரு வூட்டுலியா, யாரு சாமி?" அதிர்ச்சி அவளது குரலின் விளிம்பிலேயே தெரிந்தது.

"ஐயாவோட அம்மா தான். ரெண்டு மாசமா இன்னைக்கோ நாளைக்கோன்னு இழுத்துகிட்டு கெடந்துச்சு. வடக்க இருந்த பொண்ணும் பேரப்புள்ளைங்களும் வந்து இன்னைக்கு பாலு ஊத்த, அப்டியே அடங்கி போச்சு"

"நல்ல சாவு தான். நீங்க போங்க சாமி, நா மணிய வரச் சொல்லுறேன்"

"அவன் ஒருத்தன் மட்டுமா தப்பு எடுத்துகிட்டு வந்துடப் போறான். கூட ரெண்டு மூணு பயலுவள கூட்டி வரச் சொல்லு. நாட்டாம வீட்டு சாவு, ஊரு மொத்தத்துக்கும் கொட்டுச் சத்தம் கேக்கணும்".

"சொல்லிடுறேன் சாமி"

"சீக்கிரமா வரச் சொல்லு. இப்போவே கொட்டு ஆரம்பிச்சிடணும். அவன் பாட்டுக்கு காலையிலே பொழுது விடிஞ்சி வந்து நிக்கப் போறான்" நாட்டாமை வீட்டு சாவுக்கு தாரை தப்பட்டைக்கு சொல்ல வந்தவர் ஒளியை உமிழத் தயங்கும் டார்ச் வெளிச்சத்தில் இருட்டை விலக்கி நடந்து சென்றார்.

பூவாயிக்கு வீட்டை விட்டு இந்த நேரத்தில் தனியே சென்று சாக்கனாங்கடையில் இருக்கும் மகனை அழைக்கத் தயக்கம். காரணம், இன்றோ நாளையோ என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு இருக்கும் நிறைமாத கர்ப்பிணியான அவளது மருமகள் பேச்சிமுத்து. திருமணத்தின் போதே அப்பா இல்லை. திருமணம் முடிந்து சில மாதங்களில் அம்மாவும் இறந்துபோய்விட, பேச்சிமுத்துவிற்கு புகுந்த வீடே அவளது தாய்வீடும் ஆனது. பூவாயியும் தன் மருமகளை தன் மகளாகவே கவனித்துக்கொண்டாள். வயிற்றைப் பார்க்கும்போது அதிகம் தாங்காது என்று தோன்றியதால் தனியே விட்டுச் செல்ல அவளுக்கு பயமாக இருந்தது.

"ஏண்டீ, ஒம்புருசனுக்கு நாளு கெழம தெரியாதா? இன்னைக்குமா அந்த எழவெடுத்த சாக்கனாங்கட பக்கம் போவணும்"

"ஆமா, தொர என்னைக்கு போவாம இருந்திருக்காரு. இன்னைக்கு மட்டும் விசேசம். நா இருக்கேன் யத்தே, நீ போயி மாமன கூட்டி வா"

மருமகள் தனியே இருப்பதாக தைரியம் சொன்னாலும் பூவாயிக்கு மனசு கேட்கவில்லை. ஆனாலும் நாட்டாமை வீட்டுச் சாவுக்கு மணி போக வேண்டும். சரி நடப்பது நடக்கட்டும் என்று "பேச்சியம்மா, நீதாம்மா தொண இருக்கணும்" என்று மனதிற்குள் கடவுளை வேண்டிக்கொண்டு இருட்டிலேயே மகனைத் தேடிப் புறப்பட்டாள்.

பூவாயி பாதி வழி நடந்துகொண்டு இருக்கும்போதே "எம்பொண்டாட்டி புள்ளத்தாச்சிங்க, ரெண்டு பொட்டுக்கல்ல அள்ளிப் போடுங்க" என்று கிண்டலாக பாடியபடி மணி வருவது தெரிந்தது. கொஞ்சம் நெருங்கும்போது ஆடியபடி வருவதும்.

"எழவெடுத்தவனே, பொண்டாட்டி புள்ளத்தாச்சிங்கறது சுதி உள்ள ஏறுன பொறவு தான் தெரியுதாக்கும். நெறமாசக்காரி ஊட்டுல இருக்குறப்போ இப்புடி கொஞ்சக்கூட பொறுப்பில்லாம குடிச்சிட்டு வர்றியே"

"தன் வயிற பட்டினி போட்டு என்னுயிர வளத்தவளேஏஏஏஏஏஏஏஏஏஏஏ" தாயைப் பார்த்து மணி பாடத் துவங்கினான். மணிக்கு நல்ல கணீர் குரல். பாடிக்கொண்டே தப்பட்டை அடிப்பதில் கில்லாடி. அதுவும் கொஞ்சம் சாராயம் உள்ளே போய்விட்டால் பாட்டுக்கு கேட்கவே வேண்டாம். மணியின் பாட்டுக்காகவே தப்படிக்க வெளியூர்களில் இருந்துகூட சில சமயங்களில் சாவு வீட்டிற்கு கூட்டிப் போவது உண்டு.

"என்னப்பெத்த ஆத்தா, ஒம்புள்ள சந்தோஷத்துல குடிச்சிருக்கேன். இந்த மணிக்கு ஒரு மணிக்குட்டி பொறக்கப் போறான், அதுக்காக குடிச்சிருக்கேன். புள்ளப் பொறந்த ஒடனே பாரு, குடிக்கிறத நிறுத்திடுறேன்." தன் அன்பான மனைவிக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்ற சந்தோஷம் அவன் குரலில்.

"நாளை முதல் குடிக்க மாட்டேன், சத்தியமடி தங்கம். இன்னிக்கு ராத்திரி தூங்க வேணும், ஊத்திக்கிறேன் கொஞ்சம்" அடுத்தடுத்து பாடல்களாகவே பதில் வர ஆரம்பித்தது மணியிடம் இருந்து.

"தூங்கப் போறானாம் தூக்கம், இன்னிக்கு ஒந்தூக்கம் நாட்டாம வூட்டுல தான்"

"இன்னா விசியம், நாட்டாம வூட்டுல யார்னா புட்டுக்கிட்டாங்களா? இல்ல நாட்டாமயே புட்டுக்கிட்டாரா?" கேள்வியில் கிண்டல் தொனித்தது.

"நல்ல வார்த்த வாயில வராதா ஒனக்கு, நாட்டாமயோட அம்மா தவறிட்டாங்களாம். தப்பு கொட்ட ஒன்ன வரச் சொல்லி ஆளு வந்திச்சி".

"த, சும்மா பொலம்பாத. ஊருல எவனாவது புட்டுகிட்டா நா ஒக்காந்து அழணுமா? அப்பிடி அழணும்ன்னா தெனமும் அழணும். ஆமா, எங்க தெனமும் சாவு உழுது. தெனமும் எவன் வூட்டிலியாவது சாவு உழுந்தா கொஞ்சம் காசாவது கையிலே நிக்கும்."

"வாயக்கழுவுடா வந்தேறிக்கு பொறந்தவனே. அப்பனுக்கு தப்பாம பொறந்து வந்துருக்கு, எப்போ பாரு காசு காசுன்னு" பூவாயிக்கு கண்களில் கண்ணீர் தன்னை அறியாமல் வந்தது. மணியின் தந்தையும் "காசு காசு" என்று ஓடியவர் தான். எங்கே இறப்பு நடந்தாலும் தப்படிக்க போய்விடுவார். ஆனால், அவர் காசுக்கு அலைந்தது தனக்காக இல்லை, தன் மகனுக்காக. தன்னை போல அவனும் தப்பட்டை அடிக்காமல் பள்ளியில் படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், மணிக்கு தான் படிப்பு சுட்டுப் போட்டாலும் வரவில்லை. ஆறாம் ஏழாம் வகுப்புகளிலேயே இரண்டு முறையும் மூன்று முறையுமாக தவறி, தன் தகப்பன் இறந்த மறுநாளே அவரது தப்பட்டையை கையில் எடுத்துக்கொண்டான். மணிக்கு படிப்பு தான் வரவில்லையே தவிர தப்படிக்க நன்றாகவே வந்தது. "டகர டகர டகர டம்டம்டம்" என்று அவன் அடிக்கத் தொடங்கினால் இறப்பின் துயரம் மறந்து கூட்டம் அவனது தப்படியை கவனிக்கத் துவங்கிவிடும்.

"நீ மட்டுமா போவாத, ரெண்டு மூணு பேரா வரச் சொன்னாங்க. கணேசனையும் பாண்டியையும் கூட்டிட்டுப் போ"

"த, எந்த வூட்டுக்கு எத்தன பேரு கூட்டிக்கிட்டு போணா எவ்ளோ கறக்கலாம்ன்னு எனக்கு தெரியும். நீ போயி ஒம்மருமவள கவனி" என்று கூறிக்கொண்டிருக்கும்போதே வீடு வந்துவிட்டது.

"ஏபுள்ள பேச்சி, இந்தா மொளகா பச்சி. ரெண்டு எடுத்து தின்னு, எம்புள்ள நல்ல காரசாரமா பொறப்பான்" என்று சாக்கனாங்கடை வாசலில் இருக்கும் செவிட்டுக் கிழவியிடம் வாங்கிய மிளகாய் பஜ்ஜியை மனைவிக்குக் கொடுத்தான் மணி.

"புள்ள நா நாட்டாமைய்யா வூட்டுக்கு தப்படிக்கப் போறேன். நீ பத்ரமா இரு" என்று மனைவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான். பேச்சிமுத்து கணவன் ஆசையுடன் வாங்கி வந்திருந்த மிளகாய் பஜ்ஜியை சாப்பிட ஆரம்பித்து இருந்தாள்.

"எலேய், நாளைக்கு பொழுது சாயறதுக்குள்ள வந்துடு. வயித்துப்புள்ளக்காரி இங்கே தனியா இருக்கா".

"வர்றேன் வர்றேன்" என்று சொல்லிக்கொண்டு துணியில் முடிந்து கட்டியிருந்த பறையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு பக்கத்து வீட்டில் இருந்த பாண்டி, கணேசனையும் கூட்டிக்கொண்டு நாட்டாண்மை வீட்டை நோக்கி நடந்தான்.

நாட்டாண்மையின் வீடு நெருங்கும்போதே அழுகுரல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டது. அக்கம்பக்கத்து சொந்தங்கள் வந்துவிட்டிருந்தனர். இறந்து போனது தொண்ணூறுகளை தொட்டவரானாலும் பிறந்த பிள்ளைகளுக்கு என்றும் தாய் தானே, நாட்டாண்மையே கசங்கிய பனியனுடன் கண் கலங்கி தான் இருந்தார்.

"எலேய் மணி, சேதி சொல்லி எவ்ளோ நாழியாச்சு, அன்னநட நடந்து வர்றியா நீ, சீக்கிரம் கொட்டு கொட்ட ஆரம்பி. ஆளுங்கல்லாம் வர ஆரம்பிச்சாச்சு. இன்னும் கொட்டு கொட்டாம இருந்தா என்ன அர்த்தம்" என்று அங்கே இருந்த ஒரு பெரியவர் அதட்ட ஆரம்பித்தார்.

"ஐயா, தோ ஆரம்பிச்சிட்டேன்." என்று கூறிக்கொண்டே சுள்ளிகளை கூட்டிச் சேர்த்து தீ உண்டாக்கி அதில் கொண்டு வந்திருந்த பறையின் தோல் பகுதியை காட்டி அங்கங்கே சிறிதாக தட்டி சுதி சேர்க்க ஆரம்பித்தான்.

"ஐயா, வர்ற வழியிலே ஒண்ணும் உள்ளுக்கு சேக்காம வந்துட்டேன், ஒரு டீ குடிக்கணும். காசு இருந்தா குடுங்க"

"மணி, நீ எந்த டீ குடிக்க காசு கேக்குறன்னு தெரியாதா, கையிலே காசு ஏறாம ஒன்னோட தப்பு குச்சிய தொட மாட்டியே"

"பெரியைய்யா வூட்டு சாவாச்சிங்களே, அடிக்கிற அடிக்கு ஊரு மொத்தமும் ஐயா வூட்டுக்கு வந்துட வேணாமா, அதுக்கு தான்யா" என்று பவ்யமாக கையை நீட்டி காசை வாங்கிக்கொண்டான்.

அடுத்த சிறிது நேரத்திலேயே அந்தக் காசு சாராயமாக மாறிவிட, பறையின் தோலும் தீயில் நன்றாக வாடி இருந்தது.

டகர டகர டகர டம் டகர டம் டகர டம், டம் டம் டம் டகர டம் டம் டம் டகர டம் டம் டம்

மணியின் பறையில் இருந்து வந்த சத்தம் ஊர் முழுக்கக் கேட்கத் துவங்கியது. பக்க வாத்தியங்களாக கணேசனும், பாண்டியும்.

மறுநாள் காலையிலே நாட்டாண்மையின் வீட்டில் கூட்டம் தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு வந்திருந்தது. கூட்டம் வர வர மணியின் கொண்டாட்டமும் அதிகம் ஆகியது. நாட்டாண்மையின் சம்பந்தி முறை உள்ளவர்கள் வாய்க்கரிசி கொண்டு வர, வந்த அனைவருக்கும் அவரவர் ஊர் பெயர் உறவுமுறை சொல்லி தப்படிக்க ஆரம்பித்தான். இடையிடையே தாயின் பெருமை சொல்லும் பாடல்களும் வந்துகொண்டே இருந்தது. இறப்பிற்கு வந்த எம்.எல்.ஏ, அக்கம்பக்கத்து ஊர் பெரியவர்கள் கொடுத்த காசு என்று மணிக்கு இன்று நன்றாகவே காசு சேர்ந்திருந்தது. காசு சேர சேர, தப்பட்டையின் ஓசையும் லயமும் கூடிக்கொண்டே இருந்தது.

மாலையில் அடக்கம் முடிந்து சுடுகாட்டில் இருந்து திரும்பி வந்துகொண்டு இருக்கும்போது தான் நிறைமாத மனைவி நினைவுக்கு வந்தாள். மணிக்கு பறையை கையில் எடுத்துவிட்டால் வீடு, உறவு, பசி எல்லாமே மறந்துபோகும். காசும் சாராயமும் வந்துகொண்டு இருந்தால் போதும், ஓயாமல் கொட்டுச்சத்தம் கேட்கும். மனைவியின் நினைவு வந்ததும் வழியில் இருந்த பூக்கடையில் கொஞ்சம் கதம்பம்(3) வாங்கலாம் என்று சென்றான்.

"மாமோய், இன்னிக்கு தான் நெறையா காசு வந்துருக்குல்ல, அக்கா ஆசைக்கு மல்லிப்பூ தான் வாங்கிட்டு வாயேன்" என்றான் கணேசன்.

"அதுவும் சரி தான்" என்று நினைத்துக்கொண்டு மல்லிகைப்பூ நிறைய வாங்கிக்கொண்டு வீடு நோக்கி "எம்பொண்டாட்டி புள்ளத்தாச்சிங்க, ரெண்டு பொட்டுக்கல்ல அள்ளிப் போடுங்க" என்று பாடிக்கொண்டே நடந்தான்.

வீட்டு வாசலை நெருங்கும்போது "ஐயையோஓஓஓஓஓஓஓஓஓ இப்புடி பச்சப்புள்ளய தவிக்கவுட்டு போயிட்டியே ஆத்தா" என்று பூவாயியின் அலறல் கேட்டது.

தாயின் அலறல் கேட்டு வீட்டினுள் ஓடிப் பார்க்க அங்கே அவனது மனைவி பேச்சிமுத்து மரக்கட்டையாக கிடந்தாள். அருகிலேயே துணியில் சுற்றிய குழந்தை அழுகையுடன். குழந்தை வெளியில் வருவதில் சிக்கல் ஏற்பட்டு பேச்சிமுத்து இறந்துவிட்டிருந்தாள்.

"ஏ பேச்சியம்மா, நல்லபடியா பேரப்புள்ளய கையில குடுன்னு கேட்டதால பேரப்புள்ளய மட்டும் கையில குடுத்துட்டு எம்மவள கொண்டு போயிட்டியா" என்று பூவாயி அலறிக்கொண்டு இருந்தாள்.

மணி கையில் இருந்த மல்லிகைப்பந்தை மனைவியின் மேல் போட்டுவிட்டு குழந்தையைப் பார்த்தான். பிறந்தது அவன் ஆசைப்பட்ட மணிக்குட்டி தான்.

வெளியில் வந்த மணி, துணி முடிச்சில் இருந்த பறையை வெளியில் எடுத்து அடிக்க ஆரம்பித்தான்.

"எம்பொண்டாட்டி புள்ளத்தாச்சிங்க, ரெண்டு பொட்டுக்கல்ல அள்ளிப்போடுங்க"

டகர டகர டகர டம் டகர டம் டகர டம், டம் டம் டம் டகர டம் டம் டம் டகர டம் டம் டம்

மணியின் கொட்டுச்சத்தம் அவனது மணிக்குட்டியின் அழுகையோடும், தாயின் அலறலோடும் அந்தச் சேரியையும் தாண்டி கேட்கத் தொடங்கியது.

*******************************************************************

காண்டாவிளக்கு(1) - மண்ணெண்ணை கொண்டு எரிக்கப்படும் பெரிய அளவில் உள்ள விளக்கு.

சாக்கனாங்கடை(2) - தென்னாற்காடு மற்றும் தஞ்சையின் வட பகுதிகளில் கள்ளச்சாராயக் கடைக்கு வழங்கப்படும் பெயர்

கதம்பம்(3) - பூக்கடைகளில் மீதம் இருக்கும் பல வகை பூக்களை கொண்டு தொடுக்கப்படும் சரம்.

13 மறுமொழிகள்:

கோவி.கண்ணன் said...

கதை நன்றாக பேச்சுவழக்குடன் உள்ளது. வெற்றி பெற முரசு கொட்டுகிறேன்

இப்னு ஹம்துன். said...

ம்....அடுத்த போட்டியை கொட்டுமுரசுகொட்டி அறிவிக்கும் பொறுப்பை கொடுத்துடலாம்னு தான் தோணுது,
ஆனா 'முடிவு'ங்கறது என் கையில இல்லையே..:-))

KVR said...

//கதை நன்றாக பேச்சுவழக்குடன் உள்ளது. //

நன்றி கோவி.கண்ணன்.

//ஆனா 'முடிவு'ங்கறது என் கையில இல்லையே..:-)) //

ஊர் கூடி தான் தேர் இழுக்கணும் இப்னு. நீங்களும் ஒரு கை கொடுங்க, தேர் தானே நகரும் ;-)

இளவஞ்சி said...

// எனது படைப்பு முழு வடிவம் பெறும் முன்பாகவே போட்டி முடிந்து முடிவுகளும் //

அதனால என்ன? போட்டிக்கப்பறம் போட்டா படிக்கமாட்டம்னா சொல்லறோம்?! :)

கதை நல்லா வந்திருக்குங்க... வாழ்த்துக்கள்!

KVR said...

//அதனால என்ன? போட்டிக்கப்பறம் போட்டா படிக்கமாட்டம்னா சொல்லறோம்?! :)//

ஹீஹீஹீ, போட்டியே முடிஞ்சு போச்சு, அப்புறம் என்ன கதைய போடன்னு ஒரு சோம்பேறித்தனம் தான்.

//கதை நல்லா வந்திருக்குங்க... //

நன்றி இளவஞ்சி. தலைப்பு கொடுக்கும்போது நீங்க கொடுத்த முன்னுரை படிச்சே பீதியிலே அலையிறோம்.

மரணம் பற்றி நீங்க ஒண்ணும் எழுதலையா?

Anonymous said...

ஊர் பேச்சு வழக்குடன் நன்றாக உள்ளது. பொருத்தமான பாடல்கள்.

காண்டா விளக்கு, சாக்கனாங்கடை, கதம்பம்...
ஹும்ம்ம்ம்ம்ம்... பழைய நெனப்புடா பேராண்டிதான்.

முடிவு என்னவோ எதிர்பார்த்த மாதிரியே.
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி" ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

KVR said...

//முடிவு என்னவோ எதிர்பார்த்த மாதிரியே.
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி" ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. //

அவள் இறக்கப்போகிறாள் என்ற அடையாளத்தை குறைக்கவே அவனுக்கும் அவனது மனைவிக்கும் இடையிலான பேச்சுகளை கூட குறைத்தேன், இருந்தாலும் முடிவின் ஊகத்தைத் தவிர்க்க முடியவில்லை.

ந.ஒ.ஆ - அவரோட மேக்கிங்கெல்லாம் நமக்கு வராதுங்க.

ஓகை said...

தஞ்சைத் தரணியின் தமிழை தப்பு தட்டி தப்பில்லாமல் தந்துவிட்டீர்கள். ஆனால் சோமாசு பூரித்து பூரணம் குறைவாக இருக்கிறதோ?

வெற்றிபெற வாழ்த்துக்கள்.

KVR said...

//சோமாசு பூரித்து பூரணம் குறைவாக இருக்கிறதோ?//

வணக்கம் நடராஜன் ஐயா,

அதே அதே. இன்னும் பூரண அளவு கைவரவில்லை :-).

ILA(a)இளா said...

கதை நன்றாக உள்ளது ராஜா. போட்டிக்கான வாழ்த்துக்கள்

murali said...

திரு கேவிஆர் அவர்களே,
எனக்கு பரிச்சயமும் அனுபவவும் இல்லாத கதைக்களம். ஆனால் எனது சொந்த ஊரான நெய்வேலியில் புரட்சிகர/முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் மக்கள் கலை இலக்கிய கழகம்
(ம க இ க)போன்றோர் நடத்தும் கூட்டங்களில் தப்பு அடித்தபடி ஆவேசமாக ஆடுபவர்களை பார்திருக்கிறேன். அந்த இயக்க தோழர்களுடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது.அந்த நாட்களை ஞாபகப்படுத்தியது இந்த கதை.மேலும் எங்கள் பகுதியில் தப்பை பற மேளம் என்றுதான் சொல்வோம். இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறா?.தெளிவு படுத்தவும்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

KVR said...

அன்பு முரளிதரன்,

இரண்டுமே ஒன்று தான். நானும் உங்கள் பகுதியைச் சேர்ந்தவனே. சிதம்பரத்தான் :-)

tamilatamila said...

நல்ல கதை,தஞ்சை தமிழ் நடை நன்றாக உள்ளது,ஆனா முரசு..தப்புன்னு சுவாரசியமாக போகும் கதைல மரணத்தின் பாதிப்பு குரைந்திருக்குங்க??!!நான் சொல்வது சரியா KVR ஐயா?
வெற்றி பெற வாழ்த்துக்கள்...