காதலாகி

”நமக்குன்னு ஒரு குழந்தை இல்லாம இருந்திருந்தா?” என்ற யோசனையுடன் கூடிய கேள்வி என்னிடம் இருந்து கிளம்பினால் “இந்நேரம் நீயும் நானும் ஆளுக்கொரு மூலைல இருந்திருப்போம்” என்ற பதில் என் மனைவியிடம் இருந்து வரும். நிலைமை அந்த அளவுக்கு மோசமாகப் போகாதென்பது உண்மை என்றாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் இல்லை. என்னை மாதிரி கிறுக்கனை, கோபக்காரனைத் திருமணம் செய்து வாழ்க்கை நடத்துவது சாதாரண விஷயம் இல்லை. போகுமிடம் எல்லாம் கோபமுகம் காட்டி முசுடு என்றோ கோபக்காரன் என்றோ பெயரெடுப்பவன் இல்லை நான். என் கோபம் நான் அதிகம் உரிமை எடுத்துக்கொள்பவர்கள் மீது தான் வெளிப்படும். மிக மூர்க்கமாக.

காதலித்த காலத்தில் மூன்று வருடங்கள் இடைவிடாமல் பேசி இருக்கிறோம். வெறும் கொஞ்சல்களாக மட்டுமே இருந்ததில்லை. ஆனால், என்ன பேசினோம் என்றே தெரியாமல் தினமும் பேச எங்களுக்குள் எதாவது விஷயம் இருந்துகொண்டு தான் இருந்தது. காதலிக்கும்போது என்ன தான் பேசினாலும் பழகினாலும் திருமணத்திற்குப் பின்பு தான் ஒருவரை மற்றவர் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இரண்டு பக்கம் இருந்துமே நமக்கே தெரியாத ஏதோ ஒரு வேடத்தைப் போட்டு நாடகத்தை நடத்திக்கொண்டு தான் இருந்திருக்கிறோம். அதில் இருந்து மீண்டு சுயம் வெளிப்படும்போது “ச்சே என்ன வாழ்க்கை இது” என்ற சலிப்பு வராமல் இருந்தது இல்லை. ஆனால், குழந்தை என்ற தேவதை நம்மிடையே வரும்போது, அந்தக் குழந்தையின் உலகத்திற்குள் நாமும் பிரவேசிக்கும்போது “இது தான் டா வாழ்க்கை” என்ற எண்ணம் உருவாகிறது.

குழந்தை இருக்கும்போது கோபம் காட்டக்கூடாது, குழந்தைக்கு முன் இப்படி இருக்கக்கூடாது, அப்படி இருக்கக்கூடாது என்று சில பல சமரசங்களை இருபுறம் இருந்தும் செய்யத் தொடங்கும்போது வாழ்க்கை என்ற கலைடாஸ்கோப் வேறுவிதமான நிறத் தெறிப்புகளைக் காட்டத் தொடங்குகிறது. அதுவே, வாழ்க்கை மீதும் பந்தங்கள் மீதுமான பிடிப்பைக் கூடுதல் ஆக்குகிறது.

நேற்று தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்க்கும்போது “இந்தத் தம்பதிக்கும் ஒரு குழந்தை இருந்திருந்தால், அந்தக் குழந்தையின் உலகத்தில் இவர்கள் மகிழ்ந்திருந்தால் பிரிந்திருக்க மாட்டார்களோ” என்று எண்ண வைத்தது. ஜெயா டிவியில் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியில் வாணிகணபதியில் இருந்து வாணிகமல்ஹாசன் ஆகிப் பின்னர் மீண்டும் வாணிகணபதி. பொதுவாக ஜெயா டிவி விரும்பிப் பார்ப்பது இல்லை. ஆனாலும், நிலாவுக்குப் பிடித்த “சிப்பி இருக்குது” பாடல் ஒளிபரப்பாகிறதே என்று சேனலை மாற்றாமல் வைக்க, அன்றைய நிகழ்ச்சியில் திரும்பிப் பார்த்துக்கொண்டு இருந்தவர் வாணி.

கமல் மேல் எந்த அளவுக்கு ஈர்ப்பு உண்டோ அதே அளவுக்கு மரியாதை வாணி மீதும் எனக்கு உண்டு. கமல் மேல் அவருக்கு இருந்த காதலை அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது உண்டு. அந்த ஆவலில் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்தேன். நான் பார்க்கத் தொடங்கிய ”சிப்பி இருக்குது” பாடலில் இருந்து அதற்கு அடுத்து எல்லாப் பாடல்களுமே கமல் பாடல்கள் தான். அதற்கு முன்னரும் அப்படி தான் இருந்திருக்கும். ஒவ்வொரு பாடலையும் அவர் விவரிக்கும்போது கமல் மேல் இன்றும் அவருக்கு இருக்கும் காதலின் சிறு துளிகளைத் தான் காண்பித்தார். ஆனால், அந்தச் சிறுதுளிகளின் பிரம்மாண்டமே பிரமிப்படைய வைத்தது. இத்தனை காலம் மாறாத காதலை ஒருவன் மேல் ஒருத்தி வைத்திருக்க முடியுமா என்று மலைக்க வைத்தது.

கமலும் இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருக்கக்கூடும். வாணியின் காதலைக் கண்டு கமல் என்ற கப்பல் தரைதட்டி நின்றிருக்கக்கூடும். என்றாலும் “இவங்களுக்கு ஒரு குழந்தை இருந்திருந்தால், அதன் உலகத்தில் இவர்கள் மகிழ்ந்திருந்தால் இந்தப் பிரிவு வந்திருக்காதோ” என்ற எண்ணம் மட்டும் எனக்குள் இப்பொழுதும்.

பி.கு: அந்த நிகழ்ச்சியின் பெயர் தேன்கிண்ணமாம். இப்போ தான் வீட்டுக்காரம்மணி சொன்னாங்க. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் T20, IPL வகையறா தான். என்ன செய்ய :-(

24 மறுமொழிகள்:

ரோகிணிசிவா said...

//கமலும் இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருக்கக்கூடும். வாணியின் காதலைக் கண்டு கமல் என்ற கப்பல் தரைதட்டி நின்றிருக்கக்கூடும்//
-yosika veikareerkal, yosithu irupaaraa??
mekavum negilvaana pathivu,
kulanthaiyum thandi purithal vitukuduthal avasiyam

இப்னு ஹம்துன் said...

//என்னப் பேசினோம் // = என்ன பேசினோம்

//என்னத் தான் பேசினாலும்// = என்ன தான் பேசினாலும்

ரொம்பத் தான் ஒ(ன்)ற்றுரீங்களே...

தலைப்பு காரணமோ?

Palay King said...

Good One Ji....

KVR said...

@இப்னு - மாத்திட்டேன் நண்பா. “ஒன்றி” - ஹிஹி ;-)

@ரோகிணி - ஹ்ம்ம் அந்தக் குழந்தையின் உலகத்துக்கு நாம போய் அவர்களுக்காக கொஞ்சம் விட்டுக்கொடுக்க ஆரம்பிக்கிறப்போ அந்தப் புரிதல் தானா வரும்ன்னு நினைக்கிறேன்

@Palay - நன்றி

பாச மலர் / Paasa Malar said...

இந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன்...ஏனோ இரு வருத்தம்தான் தோன்றியது...

//“இவங்களுக்கு ஒரு குழந்தை இருந்திருந்தால், அதன் உலகத்தில் இவர்கள் மகிழ்ந்திருந்தால் இந்தப் பிரிவு வந்திருக்காதோ” என்ற எண்ணம் மட்டும் எனக்குள் இப்பொழுதும்//

குழந்தை விஷயம் ...கமலை அவ்வளவாகப் பாதித்திருக்க முடியாது என்பது என் எண்ணம்...கமல் ஒரு விசித்திரமான பிறவி இந்த விஷயத்தில்.....அப்போது படித்த
பேட்டிகள் இதைத்தான் வெளிப்படுத்தின....ஏன் இப்போதும்தான் பார்க்கிறோமே...

திருமண விஷயத்தில் மேல்நாட்டு பாணிதான் அவருக்கு...நம் நாட்டுக் கலாச்சாரம் சற்று தூரம்தான்...

பாச மலர் / Paasa Malar said...

//இரு வருத்தம்தான் //

பிழை திருத்தம்...

ஒரு வருத்தம்...

நர்சிம் said...

நல்ல பதிவு ராஜா.

Anonymous said...

கமலும் வாணியும் ஏன் பிரிந்தார்கள் என்ற காரணம் இன்றளவும் எனக்குப் புலப்படவில்லை. அவர்கள் பிரிவுக்கு குழந்தை இல்லாமை காரணம் அல்ல.

சரிகா பிரிந்ததும் வாணி பிரிந்ததும் ஒரே காரணம் என்றுதான் நினைக்கிறேன். கமல் ஒரு வண்டு - மலர் விட்டு மலர் தாவுவதற்கு எந்தப் பெண்ணால் தான் ஒத்துக்கொள்ள முடியும்?

இன்றைக்கும் வாணிமீது கமல் சகோதரர் (சாருஹாசன், சுஹாசினி, பிற சகோதரர்கள்) குடும்பத்திற்கு நல்ல பாசம் உண்டு.

கமல் ரசிகன் என்ற முறையில் அவர் வாணியைப் பிரிந்ததில் எனக்கு வருத்தமே. அதன் பிறகு, சரிகா, பின்னர் சிம்ரன், தற்போது கௌதமி. அவர் வீட்டுத்துணையிடம் என்னதான் எதிர்பார்க்கிறார் என புலப்படவில்லை.

மகேஷ்

ராஜன் said...

தேன் கிண்ணமா ! அவ்வ்வ்வ் ! நான்லாம் சொம்,புல குடிச்சே பழக்கப்பட்டவன் தல

Jeeves said...

உண்மை உண்மை உண்மை :)

KVR said...

@மலர் - இருக்கலாம். ஆனால், வாணியின் காதல் என்னை மலைக்க வைத்தது.

@நர்சிம் - நன்றி நண்பா

KVR said...

@மகேஷ் - குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்று கமல் மறுத்ததும் அவர்களது பிரச்சனைக்கு ஒரு காரணம் என்று படித்திருக்கிறேன். சில பொசஸிவ்னஸும் காரணாக இருக்கலாம். கமல் என்ன எதிர்ப்பார்க்கிறார் என்பது அவரது சொந்த விஷயம். மனைவியிடம் இல்லாத ஏதோ ஒன்றைத் தேடும் குணம் பெரும்பாலான ஆண்களிடம் இருக்கத் தான் செய்கிறது. சிலர் வெளிப்படுத்திக்கொள்கிறார்கள், பலர் அப்படி வெளிப்படையாக இருப்பதில்லை.

ஒரு சின்ன உதாரணம், யாஹூ சேட்ரூம் சென்று பாருங்கள். எத்தனை திருமணம் ஆனவர்கள் அங்கே பெண்களைத் தேடி உலாவுகின்றனர் என்று தெரியவரும் :-)

KVR said...

@ராஜன் - பார்த்துக் குடிங்க. உடம்பு சூடு பிடிச்சிக்கப் போகுது ;-)

@jeeves - :-)

கே.ஆர்.பி.செந்தில் said...

நல்ல பதிவு..

மஞ்சூர் ராசா said...

//”நமக்குன்னு ஒரு குழந்தை இல்லாம இருந்திருந்தா?” என்ற யோசனையுடன் கூடிய கேள்வி என்னிடம் இருந்து கிளம்பினால் “இந்நேரம் நீயும் நானும் ஆளுக்கொரு மூலைல இருந்திருப்போம்” என்ற பதில் என் மனைவியிடம் இருந்து வரும்//

இது அப்பட்டமான உண்மை. இதற்கு மேலும் சென்று விவாகரத்துவரை போகும். பல குடும்பங்களில் இது போல நடந்திருக்கிறது.

அதனால் தான் அந்த காலப் பெரியவர்கள் கல்யாணம் முடிந்தவுடன் குழந்தையை பற்றி கவலைப்படுகிறார்களோ என தோன்றுகிறது.

இரகுராமன் said...

ஒரு சராசரி குடும்பத்தில் இவ்வாறான பிரச்சனை நிகழ்ந்திருந்தால் நீங்கள் கூறுவது உண்மை ஆனால் கமல் அவர்களுக்கு அது ஒத்துபோகுமா என்பது எனக்கு சந்தேகம் தான் ..

விந்தைமனிதன் said...

இங்கு உலவிய நண்பர்களுக்கும் கேவிஆருக்கும்,

பிரிவு வலிமிக்கதுதானெனினும் அவற்றை ஒற்றைப் பரிமாணத்தில் பார்க்கவியலாது என்பது எனது கருத்து...

மற்றபடி கமல் மலர்தாண்டும் வண்டு என்பது சற்று காரமான விமரிசனமென்று எண்ணுகிறேன்.

சேர்ந்திருப்பது - சிறையென்றால் - அதை கலாச்சாரத்தின் பெயரால் கட்டாயப்படுத்துவது சரியா என்ன?

தர்மம் என்பது சூழலை வைத்து முடிவு செய்யப் படுவதே என் நான் எண்ணுகிறேன்

பா.ராஜாராம் said...

psycholigal approach ராஜா.

பதிவு வாசிக்கிற போது ஒரு மன நிலையம்,பின்னூட்டத்திற்கு வருகிறபோது ஒரு மன நிலையும் வாய்க்கும்.

துரதிர்ஷ்ட்ட வசமாய் வாழ்வும் இப்படியே இருக்கிறது.

நல்ல பகிர்வு.

பா.ராஜாராம் said...

பதிவு வாசிக்கிற போது ஒரு மன //நிலையம்//

நிலையும்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

கமல்-வாணி குறித்த பகிர்வுகுறித்து என்ன சொல்வது எனத்தெரியவில்லை. அதைக் காண மிஸ் பண்ணிவிட்டேன்.

கட்டுரையின் முதல் பகுதி உங்கள் வாழ்வு குறித்த கருத்துக்களா.? கொஞ்சம் பிரமித்தேன். காதல் போர்ஷனைத்தவிர எனக்கும் அப்படியே பொருந்திப்போகும் உணர்வுகள். //கலைடாஸ்கோப் வேறுவிதமான நிறத் தெறிப்புகளைக் காட்டத் தொடங்குகிறது.// அழகு, ரசனை.!

KVR said...

@செந்தில் - நன்றி

@மஞ்சூர் ராசா - நன்றி. உடனே குழந்தை பெற்றுக்கொள்பவர்களிடையே வேறொரு பிரச்சனை இருக்கு. அது பற்றி வேறொரு இடுகையில் பேசுவோம்.

@ரகு - ஒரு சராசரி பெண் இத்தனை வருடம் தன்னைப் பிரிந்த கணவன் மேல் காதலுடன் இருந்திருந்தால் ஆச்சர்யப்பட்டு இருக்க மாட்டேன். ஆனால், ஒரு செலிப்ரிட்டி அப்படி இருந்தது எனக்குப் பெரிய ஆச்சர்யம்.

@விந்தைமனிதன் - நான் கலாசாரத்தின் பெயரால் கட்டுண்டு இருப்பதை இங்கே சொல்லவில்லை நண்பா. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை :-)

KVR said...

//துரதிர்ஷ்ட்ட வசமாய் வாழ்வும் இப்படியே இருக்கிறது. //

:-)

மௌனமாய் புன்னகைக்கிறேன். நன்றி ராஜாராம் சார்.

KVR said...

@ஆதி - முதல் பகுதி என்னுடையது தான். நன்றி ஆதி.

விந்தைமனிதன் said...

//காதலித்த காலத்தில் மூன்று வருடங்கள் இடைவிடாமல் பேசி இருக்கிறோம். வெறும் கொஞ்சல்களாக மட்டுமே இருந்ததில்லை. ஆனால், என்ன பேசினோம் என்றே தெரியாமல் தினமும் பேச எங்களுக்குள் எதாவது விஷயம் இருந்துகொண்டு தான் இருந்தது//

அதுக்கப்புறம் பேச ஒண்ணுமே இல்லாம போகிற காலம் இருக்கு தல.... ஆனா அப்போ அருகாமை மட்டும் போதும்