கடந்த வாரம் வலியும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு கலவையாய்ப் போனது. எப்பொழுதும் முதலில் வருவது வலி. இம்முறையும் அப்படியே. நிலாவுக்குத் திடீரென காய்ச்சல். காலநிலை மாற்றங்களினால் வந்த காய்ச்சல் நான் அலுவலகம் வந்த பிறகு இன்னும் கூடுதலாகி சிறு வலிப்பில் முடிந்தது. வலிப்பு என்பதை வாழ்க்கையில் முதன்முதலாகப் பார்க்கும் என் மனைவி, என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்று கூடத் தெரியாத நிலை. அழுகையின் ஊடே எனக்குத் தெரிவிக்க, உடனடியாகக் கிளம்பினேன். செல்லும் வழியில் போக்குவரத்தால் தாமதம் ஏற்பட்டால் என்ன செய்வது என்று என் வீட்டின் அருகிலேயே இருக்கும் நண்பனுக்குத் தகவல் கொடுத்து நான் வரத் தாமதம் ஏற்பட்டால் உடனடியாக நிலாவை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லக் கேட்டுக்கொண்டேன். நல்லவேளையாக, அவருக்கும் அலுவலகத்தில் இருந்து விடுபட்டு வருவதில் சிக்கல் இருக்கவில்லை. எனக்கும் போக்குவரத்தில் பிரச்சனை ஏற்படாமல் சிக்னல்களும் உடனடியாக பச்சைக்கு மாறிக்கொள்ள, அந்த நண்பர் வீடு வந்து சேரும் நேரம் நானும் சென்றுவிட்டேன். நான் வீட்டிற்குச் சென்றபோது, கோமதியின் அழுகுரல் கேட்டு கீழ் வீட்டில் இருந்தவர் உடனடியாக ரோட்டிற்கு வந்து டாக்ஸி பிடித்து வந்திருந்தார். பொதுவாகவே அவர் பயந்த குணம் கொண்டவர் என்பது என் எண்ணமாக இருந்தது. அவரே, தனியாகச் சென்று டாக்ஸி பிடித்து வந்தது - பயந்த குணமெல்லாம் குழந்தையின் உடல்நிலைக்கு முன் ஒன்றுமில்லை என்று எண்ண வைத்தது. டாக்ஸியை அனுப்பிவிட்டு என் காரிலேயே மருத்துவமனைக்கு விரைந்தோம்.
சவுதியில் மருத்துவமனைகளில் எமர்ஜென்சி பிரிவு எப்பொழுதுமே பாராட்டப்படவேண்டிய அளவில் இருக்கும். இப்பொழுதும் அப்படியே. உடனடியாக நிலாவைப் பரிசோதித்துச் செய்ய வேண்டிய முதலுதவிகளைச் செய்தனர். பின்னர் ஒன்றரை நாள்கள் நிலா மருத்துவமனையில். சில சோதனைகள் செய்யும்போதும், படுக்கையில் இருந்த நாள் முழுவதும் ஐவிக்காக குத்திய ஊசியுடன் நிலாவைப் பார்க்கும்போது எனக்கும் கோமதிக்கும் கண்களில் கண்ணீர் முட்டியது. ஆனால், நிலா தைரியமானவள். வலிக்கும் அந்த நொடிகளுக்கு மட்டும் அழுதாலும் அடுத்த நிமிடமே சிரித்துக்கொண்டு பேசுவாள். பிறந்த சில நிமிடங்களிலேயே கையிலும் காலிலும் ஊசிகளின் வலியைத் தாங்கிக்கொண்டதாலோ என்னவோ வலி தாங்கும் தைரியம் அவளுக்கு இயல்பிலேயே அமைந்துவிட்டது.
வளைகுடா வாழ்க்கையில் பெற்றவை ஆயிரம் இருந்தாலும் இழப்பவற்றில் முக்கியமானது நமக்கோ குடும்பத்தினருக்கோ எதாவது சுகக்கேடு வந்தால் உடனடியாக ஓடிவரும் உற்றாரும் உறவினரும். திருமணம் ஆன புதிதில் கோமதி இந்தியா சென்றிருந்தபோது கடும் வயிற்றுப்போக்கில் பாதிக்கப்பட்டு ஒரு வாரம் ஒரு வாய் தண்ணீர் குடித்தாலும் டாய்லெட் போகவேண்டிய நிலையில் படுத்தப் படுக்கையாய் தனிமையில் கிடந்திருக்கிறேன். கோமதிக்குச் சில சுகவீனங்கள் வந்தபோதும் அப்படி தனியாகவே சமாளித்து இருக்கிறோம். நிலா விஷயத்திலும் ஓரளவு தனியாகவே சமாளித்துவிட்டோம். கேள்விப்பட்டுத் தொலைபேசிய நண்பர்களிடமும் பயப்பட ஒன்றுமில்லை, சமாளித்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டோம்.
குழந்தைக்கான முதலுதவிகளைத் தெரிந்துவைத்திருக்க வேண்டிய அவசியத்தை இந்தச் சம்பவம் எங்களுக்கு உணர்த்தியது.
1. சிறு குழந்தை இருக்கும் வீட்டில் டிஜிட்டல் தெர்மாமீட்டர் இருக்க வேண்டியது அவசியம். குழந்தையின் உடல் வெப்பநிலை அதிகரிக்கும்போது அவ்வப்போது வெப்பநிலை சோதித்தல் மிக அவசியம்.
2. உடல் வெப்பநிலை அதிகரிக்கும்போது குளிர்ந்த நீரில் குளிப்பாட்டி/துடைத்துவிட்டு உடலின் வெப்பநிலையைச் சமநிலைக்குக் கொண்டு வருதல் முக்கியம். குழந்தையின் உடல் வெப்பநிலை அதிகரித்தால் அது வலிப்பில் கொண்டுபோய் விடும்.
பொதுவாகப் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபாடு இல்லாதவன் நான். இந்த முறை நிலாவின் உடல்நிலை காரணமாக சுத்தமாக அது பற்றிய எண்ணமே இல்லாமல் இருந்தேன். ஆனால் நல்லவேளையாக வியாழனன்றே நிலா முழுநிலவாக மாறி சரியாக பண்ணிரெண்டு மணிக்கு அவளது அம்மாவோடு எனக்கு வாழ்த்துச் சொல்லியது மகிழ்வான விஷயம். பொதுவாக என் பிறந்தநாளுக்கு எனக்குத் தெரியாமல் எதாவது பரிசு வாங்கி எனக்குக் கொடுப்பது என் மனைவியின் வழக்கம். நானும் அப்படியே. இது போன்ற சின்னச் சின்னச் சந்தோஷங்களில் இருவருக்குமே ஆர்வம் உண்டு என்பதால் அது தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இந்த முறை அப்படி எதுவும் பரிசு கொடுக்க முடியவில்லை என்பது கோமதியின் வருத்தம். கன்னத்தில் முத்தமிட்டு Happy Birthday Raja என்று வாழ்த்துச் சொல்லிய என் செல்ல நிலாவே அவர் கொடுத்தப் பரிசு தானே!
பல பிறந்தநாள்களுக்குப் பிறகு இந்த முறை ஏகப்பட்ட வாழ்த்துகள் குவிந்தது. எல்லாம் ஆர்குட், ஃபேஸ்புக் உபயம். என் பிறந்தநாள் மறந்துபோனவர்களைக் கூட இது போன்ற வலைத்தளங்கள் நினைவுபடுத்திவிடுகிறது. பல பள்ளி, கல்லூரி, இணைய நட்புகளும் வாழ்த்தி இருந்தன. ஆனால், இது போன்ற வலைத்தளங்கள் மூலம் பிறந்தநாள் அறிந்து வாழ்த்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஃபேஸ்புக்கில் இருக்கும் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லும் வசதி நாம் சொல்லாமலே நம் பெயரில் நண்பர்களை வாழ்த்திவிடும். கடந்த வாரம் ஒரு நண்பனுக்கு என் பெயரில் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பிவிட்டது. ஆனால், அவனது ஒரிஜினல் பிறந்த நாள் வேறு. போலியான பிறந்த தினத்தை அவன் குறிப்பிட்டு இருந்தது ஃபேஸ்புக்கிற்குத் தெரியவில்லை.
இணையப் பரிச்சயம் தொடங்குவதற்கு முன்பிருந்தே கல்லூரி நாள்கள் முடிந்த பிறகும் தொடர்ந்து பண்ணிரெண்டு வருடங்களாக மறக்காமல் எனக்குத் தொலைபேசி வாழ்த்துச் சொல்லிய ஜெர்மனியில் இருக்கும் என் தோழி இந்த முறை சொல்ல மறந்துவிட்டாள். பிறருக்கெல்லாம் நினைவூட்டிய ஃபேஸ்புக், ஆர்குட் இன்னபிற சமாசாரங்கள் அவளுக்கு என் பிறந்தநாளை மறக்கடிக்க செய்துவிட்டது போல. மறதிக்குத் தண்டனையாக ஜெர்மனியில் கிடைக்கும் எதாவது விலை உயர்ந்த பரிசாகச் கேட்கலாம் என்று இருக்கிறேன்.
23 மறுமொழிகள்:
TAKE CARE.
இன்னும் நிலா பல உயரங்களை கெடந்து வாழ்வில் வெற்றி பெற எல்லாம் வல்ல பரம் பொருளை வேண்டிக்கொள்கின்றேன்.
அன்புடன்
ஜாக்கி..
மகள் நிலா நலமடைந்ததில் மகிழ்ச்சி. இரண்டு முதலுதவி குறிப்புகள் எளிமையானது, ஆனால் அதன் முக்கியத்துவத்தை உணர்கிறேன். இங்கே ஜித்தா பகுதியிலும் இவ்வகை காய்ச்சல் புழங்குகிறது.
ஹப்பாடா.நிலா குணமடைந்தது மகிழ்ச்சி! படிக்கும்போதே மனவருத்தமாக இருந்தது...வலியை அனுபவித்துகொண்டிருக்கும்போது நம்மால் ஒன்றும் செய்ய இயலாமல் பார்த்துக்கொண்டு மட்டுமே இருப்பது..:-(
சுவரோட்டியில் வாழ்த்துகள் சொல்லியிருந்தோமே! :-)
நிலாவுக்கு என் belated பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
:)
Glad that she has recovered. Please be careful in the future. Never let the fever exceed 100. When you feel she has elevated temperature, give paracetamol syrup immediately. then go to a hospital. You can give a towel bath, place a wet cloth on the forehead. I'm sure the doctors have given sufficient advise. However, you need to be careful until she crosses 6yrs.Take care.
:)) எங்க வீட்டில் எல்லாம் யாருக்கு பிறந்தநாள் என்றாலும் எம்பொண்ணுதான் கேக் வெட்டுவாள், அவளுக்குத்தான் பிறந்த நாள் வாழ்த்து சொல்லணும். அதே பழக்கம்..
மனசாட்சி: "எப்டில்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு" :))
Take care of nila nanpaa..
@சுரேஷ் - Thanks, we do :-)
@ஜாக்கி - நன்றி நண்பரே
@suffix - எளிமையானது தான். ஆனால், ஜுரத்தின் வீச்சு அதிகம் ஆகும்போது அது இப்படியான பிரச்சனையில் முடியும் என்று எங்களுக்கு யாரும் சொல்லவில்லை. இதைப் படிப்பவர்களாவது முன்னெச்சரிக்கையாக இருக்கட்டுமே.
@முல்லை - //வலியை அனுபவித்துகொண்டிருக்கும்போது நம்மால் ஒன்றும் செய்ய இயலாமல் பார்த்துக்கொண்டு மட்டுமே இருப்பது..:-( // - உண்மை :-(. வாழ்த்துகளுக்கும் நன்றி முல்லை
@விதூஷ் - செம்ம சமாளிஃபிகேஷன் :-)
@Azhagan - Thanks for your advice
@ரமேஷ் - நன்றி
காய்ச்சல் தொடங்கிவிட்டால், 4 மணிநேரத்துக்கு ஒருமுறை பாராஸிட்டமால் கொடுத்துவிட வேண்டும். காய்ச்சல்தான் இல்லையே என்று சிலர் மருந்து கொடுப்பதைத் தள்ளீப் போடுவார்கள். அது தவறு. சப்போஸிட்டரி (every 6-8 hrs) இன்னும் விரைவில் உடல்வெப்பத்தைக் குறைக்கும்.
காய்ச்சல் சமயத்தில் குழந்தையை உடகார/ படுக்க வைத்திருப்பது பாதுகாப்பு. வலிப்பு வரும்சமயம் கீழே விழுந்து அடிபடாமல் காக்க உதவும்.
மீறி வலிப்பு வந்தாலும், என்ன செய்யவேண்டுமென்பதையும் தெரிந்துவைப்பது நல்லது. இறைவன் காப்பான். இனி வராது.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
வாவ்... உங்க பொண்ணு பேரு நிலாவா? ச்சோ ச்வீட் அண்ட் க்யூட்... பாலைவன வாழ்க்கையில் நிலா(மாதிரி குழந்தை) எவ்ளோ குளிர்ச்சி??!!
//என் செல்ல நிலாவே அவர் கொடுத்தப் பரிசு தானே!//
கவித.. கவித.. வாழ்க்கைல கடைசி வரை இதை மறக்காம இருந்தா சரிதான்
நிலா குணமடைந்தது மகிழ்ச்சி!
(நான் முதல்ல பதிவ சரியா படிக்கலை
@ஹுசைனம்மா - சப்போஸிட்டரி பற்றி எங்களுக்கு மருத்துவமனை போன பிறகு தான் தெரியும். இப்பொழுது கையில் வைத்திருக்கிறோம்.
@ஜெய்சங்கர் - பரவாயில்லை நண்பரே
//வாவ்... உங்க பொண்ணு பேரு நிலாவா? ச்சோ ச்வீட் அண்ட் க்யூட்... பாலைவன வாழ்க்கையில் நிலா(மாதிரி குழந்தை) எவ்ளோ குளிர்ச்சி??!//
ஆமா குளிர்ச்சியான நிலா :-)
//கவித.. கவித.. வாழ்க்கைல கடைசி வரை இதை மறக்காம இருந்தா சரிதான்//
அதெல்லாம் மறக்க மாட்டோம் தல :-)
சித்தப்பு டேக் கேர்
//சித்தப்பு டேக் கேர்//
thanks maamu. u too take care of my marumagan
:-((
Take Care anna
have adol paedtrics suppostries in hand always.it will help for smaller children. i am one of the mother who is used to these high temp,cold baths and pressure
மூனு பேருக்குமே வாழ்த்துக்கள்ண்ணே!
:-)
உங்க மூணு பேர்ல யார் குழந்தை? :-)
ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு வலிப்பு வந்தால் கவலை கொள்ள தேவையில்லை .
வலிக்கி - சாரி
மகிழ்ச்சிக்கு - வாழ்த்துக்கள்
நெகிழ்வான பகிர்வு, முடிவில் மனதை இலகுவாக்கி முடித்திருக்கிறீர்கள்.
Post a Comment