வருட இறுதி. கவுண்ட் டவுன் ஸ்டார்டட். பொதுவாகவே வருட ஆரம்பமும் இறுதியும் அலுவலக வேலைகள் தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும். இம்முறையும் அப்படியே. 2010 எனக்கு நல்ல வருடமாகத் தான் இருந்திருக்கிறது. வெகுநாள்களாக முடிக்க நினைத்த தேர்வுகளை முடித்தது, இரண்டாவது குழந்தை அதுவும் நான் ஆசைப்பட்ட மாதிரியே பெண் குழந்தை என மகிழ்ச்சியான வருடம். வருகின்ற வருடமும் சிறப்பாய் அமைய இறையருள் கிடைக்க வேண்டும், கிடைக்கும். நம்பிக்கை தானே வாழ்க்கை!!
****************************
தஞ்சை பிரகாஷ் கதைகள் படித்துக்கொண்டு இருக்கிறேன். தஞ்சை பிரகாஷ் - இந்தப் பெயர் முதலில் எனக்கு அறிமுகமானது எழுத்தாளர் இரா.முருகன் வழியாக. பதிவுகள் பிரபலமடையாத குழுமக்காலத்தில் ரவுண்டு கட்டி அடித்துக்கொண்டிருந்த ராயர் காபி கிளப்பில் அவர் எழுதிய கட்டுரை வாயிலாக அறிமுகம். அப்பொழுது முதலே தஞ்சை பிரகாஷின் எழுத்துகளைப் படிக்க வேண்டும் என நினைத்து, இப்பொழுது தான் கைகூடியது. பிரகாஷின் எழுத்து கடித்துத் துப்பக்கூடிய வகையானது அல்ல. மென்மையாய்த் தடவி வசீகரிக்கிறது. கதையின் நாயகிகள் ஒவ்வொருவரும் அவ்வளவு அழகானவர்கள். கதையின் களனும் பொதுவான சிறுகதை விதிகளில் இருந்து மாறுபட்டுத் தனித்துத் தெரிகிறது. நல்ல சிறுகதைகள் வாசிக்கும் விருப்பம் உடையவர்கள் கண்டிப்பாக வாசிக்கலாம்.
****************************
காமிக்ஸ் படிக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது எனது எட்டாவது வயதில். என் மாமா ஒருவர் கிடைக்கும் அத்தனை காமிக்ஸ் புத்தகமும் வாங்கும் பழக்கமுடையவர். மாமா வீட்டுக்குப் போனால் வீடு முழுவதும் காமிக்ஸ்மயமாய் இருக்கும். அடுத்த ஐந்து வருடங்கள் காமிக்ஸ், அமர்சித்திரக்கதைகள், சிறுவர் மலர்கள் எனத் தேடித் தேடிப் படித்த காலம். அந்த வசந்த காலத்தை மீண்டும் எனக்கு இரத்தப்படலம் காமிக்ஸின் முழுத் தொகுப்பு வழியாகக் கொடுத்தவன் என் தம்பி தினேஷ். எந்த ஒரு ஆக்ஷன் சினிமாவிற்கும் குறைவில்லாத பரபர வேகம், முடிச்சுகள், திருப்பங்கள் என அசத்தலானத் தொகுப்பு.
****************************
பிறந்த குழந்தையைத் தூக்குவதில் இன்றும் ஆண்களுக்குத் தயக்கம் இருக்கிறது. எனக்கும் முதல் குழந்தை பிறக்கும் வரையில் இருந்தது. இப்பொழுது இரண்டாவது குழந்தையில் பழகிவிட்டது. லயா என்று பெயர் தீர்மானித்து இருக்கிறோம். தனது அக்கா அளவிற்குத் தூங்குவதில் பிரச்சனை செய்யாமல் இருக்கிறாள். போகப் போகத் தான் சுயரூபம் வெளிப்படக்கூடும், பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நேற்று குசும்பன் “உங்க பொண்ணு பொறந்தநாளும் என் பொறந்தநாளும் ஒண்ணு” என்று சொல்லி பீதியைக் கிளப்பி இருக்கிறார். வருங்காலத்தில் என் சின்னமகள் என்னென்ன ரவுடித்தனம் செய்வாளோ என்று பயமாக இருக்கிறது.
****************************
நெல்லுக்கிரைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம். அது போல நான் சென்னையில் இருந்த சமயத்தில் கவிஞர் பா.ராஜாராமும் இருக்க, அவரைச் சந்திக்க வந்த பதிவர்களை நானும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படிப் பல பதிவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துப் புண்ணியம் கட்டிக்கொண்டவர் மணிஜி. சுவையான அரட்டைகளுடன் கழிந்தது கடந்த புதன் மாலைப்பொழுது. தாங்க்ஸ் மணிஜி. பா.ராஜாராமும் நானும் ஒரே நாட்டில் வசித்தாலும் சந்தித்துக்கொண்டது என்னவோ சென்னையில் தான். தொலைபேசியில் பேசும்போது இருக்கும் அதே எளிமையும் இனிமையும் நேரிலும். சீக்கிரம் தாத்தா ஆக வாழ்த்துகள் சார்.
இந்த முறை தொலைபேசியில் பேசியது, நேரில் சந்தித்ததில் மறக்க முடியாதவர் இரண்டு பேர். இருவருமே எலிஜிபிள் பேச்சுலர்ஸ். முதலாவது நபர் சஞ்சய். எனக்கு யாருடனாவது முதன்முறை தொலைபேசியில் பேசும்போது ஒரு சின்னத் தயக்கம் இருக்கும். அப்படியான தயக்கங்களை தன்னுடைய நட்பான பேச்சால் உடைத்தெறிந்தவர் சஞ்சய். எனக்கு மட்டுமல்ல என் மகள் நிலாவுக்கும் நட்பாகிப்போனார். சஞ்சயிடம் பேசிய அன்று மாலை வேறொரு அழைப்பில் இருந்தபோது என் மகள் யாருடன் பேசுகிறேன் என்று கேட்க நான் “ஒரு அங்கிள் கிட்டே பேசுகிறேன்” என்று சொன்னேன். அதற்கு அவள் “சஞ்சய் அங்கிளா?” என்று கேட்டது ஆச்சர்யம்.
இரண்டாவது எலிஜிபிள் பேச்சுலர் ”தோழி புகழ் கார்க்கி”. மனுஷன் ஒரு நிமிடத்திற்கு நாலு ஜோக்கடிக்கிறார். ஜோக்கடித்தல் என்ற பெயரில் மற்றவரைப் புண்படுத்தும் வகையான ஜோக் இல்லை. மனம் விட்டு சிரிக்க வைப்பவை. அதையும் கூட முன்னேற்பாட்டுடன் சொல்வதில்லை, சரளமாய் வந்து விழுகிறது. பா.ராஜாராமுடனான சந்திப்பு இனிமையாய்க் கழிந்ததற்குக் கார்க்கியும் ஒரு காரணமாய் அமைந்தார், நன்றி நண்பா. இரண்டு பேச்சுலர்களும் விரைவில் பேச்சிலர்களாக மாற வாழ்த்துகள்.
****************************
குழந்தை பிறந்ததற்கு ஃபேஸ்புக்கிலும், கூகிள் பஸ்ஸிலும், தொலைபேசியிலும், நேரிலும் வாழ்த்துகளைச் சொன்ன அத்தனை நட்புகளுக்கும் நன்றி. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
12 மறுமொழிகள்:
//நம்பிக்கை தானே வாழ்க்கை!!//
புத்தாண்டு நல்வாழ்த்துகள்
புத்தாண்டு வாழ்த்துகள்
நிலா, லயா இருவருக்கும்.
ஒரு டவுட்: அடுத்த குழந்தை பிறந்தா யாழினின்னு பேர் வைப்பீங்களா?
கோவி & அமித்து அம்மா, வாழ்த்துகளுக்கு நன்றி. இன்னொண்ணா? இந்தியாவில் மக்கள்தொகை இப்போவே எகிறுது, போதும் :-)))
ஹாய் அபுலயா!
ஊரிலிருந்து வந்துட்டீங்களா?
குட்டி பாப்பா எப்டி இருக்காங்க?
வாழ்த்துகள் - மீண்டும்.
உங்களை சந்தித்ததில் எனக்கும் நிறைவு ராஜா. (எவ்வளவு நாள் விருப்பம் அது). கார்க்கி குறித்து என் அபிப்ராயமும் இதுவே. மனுஷனுக்கு சீக்கிரம் திருமணம் ஆகவேணும் என அவர் குலசாமிக்கு வேண்டுதல் வைத்திருக்கிறேன். இன்னும் வயிறு எரிகிறது..உஷ்ஷப்பா. :-)
திருமணம் ஆன நர்சிம்மும் நல்லாத்தானே சிரிக்கிறார். இது எப்படி? இயந்திர கோளாறா இருக்குமோ? :-))
நிலா,( மணிஜி மகளின் பெயரும் இதுவே). லயாவிற்கு என் அன்பு.
@இப்னு ஹம்துன் - நன்றி நண்பா :-)
@பா.ரா - நர்சிம்மின் சிரிப்பு ”இடுக்கண் வருங்கால் நகுக” வகை ;-)
பேச்சுலர் - பேச்சிலர்..
என்னமோ போங்கண்ணே!
உங்கள் பிளாக் இத்தனை நாளாக எப்படி மிஸ் செய்தேன் தெரியலை. இன்று முதல் தொடர்கிறேன்.
நல்ல எழுத்து. சுவாரஸ்யமாய் உள்ளது
தஞ்சை பிரகாஷ். பல முறை நேரில் சந்தித்து பேசும் பாக்கியம் பெற்றேன். இன்னும் அவர் புத்தகம் முழுமையாய் படிக்கலை!!
லயா அருமையான பெயர். நிலாவும் கூட தான் (சுஜாதா கதை ஒன்றில் நிலா பெயர் பார்த்த நினைவு)
சென்னையில் ராஜாராம், KVR உள்ளிட்டோர் சந்தித்தபோது மணிஜி ஏன் எனக்கு சொல்லாமல் போனார்? அடுத்த முறை பார்க்கும் போது மணிஜியை ஒரு வழி பண்ணனும்
@மோகன் - தஞ்சை பிரகாஷை நேரில் சந்தித்தது குறித்து இரா.முருகன் எழுதிய கட்டுரையின் மூலமே நான் அவரிடம் ஈர்க்கப்பட்டேன். கதைகள் படித்ததும் மொத்தமாய். புத்தகத் திருவிழாவில் கிடைக்கலாம், வாங்கிப் படிங்க. பா.ரா சந்திப்புக்கு ஏன் கூப்பிடலைன்னு மணிஜி கூட சண்டை போட வாழ்த்துகள்
//நேற்று குசும்பன் “உங்க பொண்ணு பொறந்தநாளும் என் பொறந்தநாளும் ஒண்ணு” என்று சொல்லி பீதியைக் கிளப்பி இருக்கிறார். வருங்காலத்தில் என் சின்னமகள் என்னென்ன ரவுடித்தனம் செய்வாளோ என்று பயமாக இருக்கிறது.
//
ஆடி போய் ஆணி வந்தா சும்மா டாப்பா வருவா சித்தாப்பூ! டோண்ட் ஒர்ரி!:))
//மோகன் குமார் said...
உங்கள் பிளாக் இத்தனை நாளாக எப்படி மிஸ் செய்தேன் தெரியலை.இன்று முதல் தொடர்கிறேன்.
//
சித்தப்பு இதுமாதிரி கள்ளங்கபடம் இல்லாத நல்லவங்க இருப்பதால் தான் அப்ப அப்ப மழை பெய்யுது:)))
Post a Comment