இணைய நட்பூக்கள் - 1

இந்த நட்சத்திர வாரத்தில் நான் தமிழ் இணையத்தில் நுழைந்தபோது கிடைத்த சில நட்புகளைக் குறித்துப் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். இவர்களில் பலர் கால ஓட்டத்தில் இணையத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டாலும் என் மனதின் மூலையில் எங்கேனும் ஓரிடத்தில் ஒளிந்துகொண்டு இருப்பவர்கள்.

ஆசாத்: மரபுக்கவிதை நேசர்களுக்கு இவர் ஆட்சீர் ஆசாத். எண்சீர் விருத்தம் எழுதுவதில் கில்லாடி. பன்முகத்தன்மையின் மொத்த உருவம். பாசமிகு அண்ணன். அவர் சவுதியில் இருந்த காலம் வரையில் என்னுடன் வாரத்தில் ஐந்து நாள்களாவது குறைந்தபட்சம் பேசிவிடுவார். நானோ ஃபோன் பேசுவதில் மகா சோம்பேறி. நானாக ஒரு நாளும் அழைப்பதில்லை என்ற குறை அவருக்கு இன்றும் உண்டு. ஆனாலும் என்னை அழைத்துப் பேசுவதை நிறுத்தாதவர். இன்றும் தொடர்பில் இருப்பவர்.

ஆசிப்: அண்ணன்களில் ஆசாத் ஒரு வகை என்றால் ஆசிப் இன்னொரு வகை. குடும்பத்தில் மூத்த அண்ணனுடன் இருக்கும் இறுக்கம் அடுத்த அண்ணனிடம் இருக்காதல்லவா? அது போன்றவர் ஆசிப். தோளில் கைபோட்டு நட்புறவோடு பேச முடியும். பல நேரங்களில் சிரிக்கவும், சில நேரங்களில் சிந்திக்கவும் வைக்கும் அண்ணன் இவர். இவருடன் பேசிக்கொண்டு இருந்தால் நேரம் போவது தெரியாது. தமிழ் இணையத்தின் முன்னோடிகளில் ஒருவர்.

பா.ராகவன்: என்னை எப்பொழுது பார்த்தாலும் “வாய்யா” என்று அன்போடு அழைப்பவர். மகா சுறுசுறுப்பும், கமிட்மெண்ட்டும் ஒருங்கே கொண்ட இவருக்குக் கிடைத்தச் சோம்பேறி சிஷ்யர்களில் முதலிடம் எனக்கு. சுறுசுறு சிஷ்யர்கள் இன்று எழுத்துலகில் கலக்கிக்கொண்டு இருக்க, நான் மட்டும் இன்னமும் இப்படியே. அதில் அவருக்குக் கோபம் இருந்தாலும் ஊருக்கு வரும் நேரத்தில் அவரை சந்திக்காமல் போனால் கோபம் இன்னும் அதிகமாகும். அந்த பயத்திலேயே ஓடிப் போய் தலையைக் காண்பித்துவிடுவேன். அவரது நெடுநாள் வேண்டுகோள் ஒன்று இன்னமும் கிடப்பிலேயே கிடக்கிறது. இந்த வருடமாகவது முடிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ்.

குமரேசன்: இவரை பலருக்குத் தெரிந்திருக்காது. மரத்தடி இணையக் குழுமத்தின் தோற்றுநர். சாருவின் குழுமத்தில் பழக்கமானவர். பின்னர் நமக்கென ஒரு குழுமம் இருந்தால் நல்லது என்று தொடங்கப்பட்டதே மரத்தடி. குமரேசன், மதி, ப்ரியா என்ற மூவரால் ஆரம்பிக்கப்பட்ட மரத்தடி பின்னர் ஆலமரமாக தழைத்தது. எதிலும் தன்னை அதிகம் வெளிப்படுத்திக்கொள்ளாத சைலண்ட் பார்ட்டி. செம காமெடி சென்ஸ் உள்ள மனிதர். இப்பொழுது தொடர்பில் இல்லை.

மதி: பலருக்கு மரத்தடி மதி, சிலருக்கு மதி கந்தசாமி, எனக்கு மதியக்கா. மரத்தடி குழுமம் பலரது பார்வைக்குச் செல்லவும் பலரது அறிமுகம் குழும உறுப்பினர்களூக்குக் கிடைக்கப் பெறச் செய்ய இவரது முயற்சி அளப்பறியது. ஆரம்பத்தில் என் எழுத்தில் பிழைகள் கொட்டிக்கிடக்கும். அப்பொழுதெல்லாம் என்னை ஊக்குவித்து பிழைகளை நீக்குவதில் முதலிடத்தில் இருந்தவர். யார் கண்பட்டதோ இவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள். பின்னர் மரத்தடியுடன் பிணைப்பைக் குறைத்துக்கொண்டு வலைப்பதிவுக்கு வந்துவிட்டேன்.

ப்ரியா: மரத்தடியின் ஆரம்பகாலத்தில் அழகாய் பல கவிதைகள் எழுதியவர். நல்ல தோழி. பழைய மரத்தடி கேங் பலரும் இவரது தலைமையில் அரட்டை அடிப்போம். என்னுடைய அல்டர் ஈகோவான “கொஸப்பேட்ட குப்ஸாமி” உருவாகக் காரணமாக இருந்தவர். மரத்தடியில் இவர் “கண்ணம்மாப்பேட்ட கவிதை” எழுத, அதற்கு மறுமொழி எழுத உருவெடுத்தவர் தான் குப்ஸாமி. பின்னர் குப்ஸாமியைப் பலருக்கும் பிடித்துவிட வலைப்பதிவில் நல்ல ரவுண்டு வந்தார். ப்ரியாவிடம் கவிதையைத் தாண்டி நான் ரசிப்பது அவரது குரல். அருமையான பாடகி. கழுதையாய் இருந்த எங்கள் நட்பு இப்பொழுது கட்டெறும்பாய் எப்பொழுதாவது ஃபேஸ்புக் விசாரிப்புகளோடு மட்டும்.

பிரசன்னா: மேலே குறிப்பிட்டவர்கள் அனைவரும் என்னால் மரியாதையாய் அழைக்கப்படுபவர்கள், ஆனால் பிரசன்னா வாடா போடா நண்பன். மரத்தடியில் அப்பாவி போல உள்ளே வந்தவனுக்குள் அடப்பாவியாய் எழுத்துத்திறமை ஒளிந்து இருந்தது. பிரசன்னா தனது கவிதைகள் மூலம் பிரபலம் அடைந்தாலும் எனக்குப் பிடித்தது அவனது சிறுகதைகள். கதைகள் பலவற்றிலும் திருநெல்வேலித் தமிழ் துள்ளி விளையாடும். ராயர் காபி கிளப் நடத்திய சிறுகதைப்போட்டியில் அவன் எழுதிய “சிவாஜி வாயிலே ஜிலேபி” இன்றும் மறக்க முடியாது. பயபுள்ள இப்பொழுது கிழக்கில் பிசியாகி எழுதுவது குறைந்துவிட்டது.

[இன்னும் பூக்கும்]

14 மறுமொழிகள்:

manjoorraja said...

இப்போதைய நட்புகளை பற்றியும் எதிர்ப்பார்க்கிறேன்.


இனிய நட்சத்திர வாழ்த்துகள்

# கவிதை வீதி # சௌந்தர் said...

வித்தியாசமான நினைவலைகள்...
தொடருங்கள்..

விஜி said...

நல்லாருக்கு ..நட்புகள் எப்போது நினைத்தாலும் புன்னகைபூக்க வைப்பவை...:)

சிங்கை நாதன்/SingaiNathan said...

U miss so many ,, including harianna .. Still good to read..

KVR said...

@மஞ்சூர் ராஜா - ஆரம்பிச்சப்போ பழைய ஆளுங்களைப் பற்றி மட்டும் தான் எழுதற எண்ணத்தில் ஆரம்பிச்சி இருக்கேன். புதுசு ஹ்ம்ம் பார்க்கலாம்.

@சௌந்தர் - நன்றிங்க

@விஜி - உண்மை

@செந்தில் - மச்சி, தொடரும் போட்டிருக்கேன் டா :-)

காவேரிகணேஷ் said...

நட்பை அடையாளம் காட்டுவதிலிருந்தே நீங்கள் நல்ல நட்பாளர் என்றே தெரிகிறது.

வாழ்த்துக்கள் தோழமைக்கு..

Palay King said...

இனிய நட்சத்திர வாழ்த்துகள்

விந்தைமனிதன் said...

பெரிசுன்னு ப்ரூஃப் பண்ணிட்டீரு போங்க :)

ILA(@)இளா said...

மரத்தடிக்கு போயாச்சா? ஒரே பீலிங்க்ஸா கீது அண்ணாத்த..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இனிய அறிமுகங்கள்.

குசும்பன் said...

சித்தப்பு இந்த லிஸ்டில் இருக்கும் பல பெருசுங்க வயசிலும் பெருசுங்க ஆச்சே...அப்ப அவ்வளோ வயசான ஆளா நீயி?:))

கே.ஆர்.பி.செந்தில் said...

இனிய நட்சத்திர வாழ்த்துகள் KVR ...

KVR said...

@காவேரிகணேஷ் - நன்றிங்க

@இளா - ஃபீலிங்ஸு கூடப் பொறந்தது ;-)

@விம - இல்லைன்னு சொன்னா மட்டும் ஒத்துக்கவா போறிங்க

@குசும்பன் - எலே மாப்பி, ஆசிப்பையும் தான் ஃப்ரண்டுன்னு போட்டிருக்கேன். அதுக்காக அவர் வயசா எனக்கு? பிச்சிப்புடுவேன் பிச்சி

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி நண்பர்களே

Nesan said...

நன்றி இவர்களை மீண்டும் ஞாபகப் படுத்தியது கொஸப்போடையும் மதியக்காவும் முன்னர் அதிகம் வாசித்தேன் காலமாற்றம் இவர்களை மீண்டும் உங்கள் மூலம் அறிகிறேன்!