பதிவின் தலைப்பைப் பார்த்து சமையல் பிரியர்கள் இது ஏதோ புது ரெசிபி போல என்று ஓடி வர வேண்டாம். சமையல் செய்யப் பிடிக்காதவர்கள் தலை தெறிக்க ஓடவும் வேண்டாம். இந்தப் பதிவு இஞ்சி ரொட்டி என்கிற கூகிள் நிறுவனத்தின் செல்பேசி இயங்குதளமான ஆண்ட்ராய்டின் புதிய குழந்தை ஜிஞ்சர் ப்ரட்டைப் பற்றியது. குழந்தையைப் பற்றிப் பார்க்கும் முன் கொஞ்சம் ஆண்ட்ராய்டையும் பார்த்துவிடுவோம். செல்பேசிகளுக்கான இயங்குதளங்களை (Operating System) காசுக்கு வாங்கி செல்பேசி நிறுவனங்கள் தங்கள் பேசிகளுக்கு உயிர் கொடுத்துக்கொண்டு இருந்த நேரத்தில் ”எலவசம் எலவசம் அள்ளிக்கோ அள்ளிக்கோ” என்று கூகிள் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்பட்ட திறவுமூல (Open Source) இயங்குதளம் தான் இந்த ஆண்ட்ராய்ட். ஆண்ட்ராய்டின் சிறப்பு அம்சமே அதன் திறவுமூலம் தான். இப்பொழுது Nexus, HTC, Samsung முதலான பல செல்பேசி நிறுவனங்களும் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட செல்பேசிகளைக் கூவிக் கூவி விற்க ஆரம்பித்துவிட்டன.
கப்கேக், டோனட், எக்லெய்ர், ஃப்ரொயோவைத் தொடர்ந்து பிறந்த குழந்தை தான் ஜிஞ்சர் ப்ரட். குழந்தை 2010 டிசம்பரிலேயே பிறந்துவிட்டாலும் இப்பொழுது தான் செல்பேசி நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஜிஞ்சர் ப்ரட்டை தங்களது செல்பேசிகளுக்கு ஊட்டி விட ஆரம்பித்து இருக்கின்றன.
ஜிஞ்சர் ப்ரட்டின் சிறப்பு அம்சங்கள்:
இதற்கு முந்தைய குழந்தையான ஃப்ரொயோவின் தோற்றத்தில் இருந்து பெரிய மாற்றம் ஏதுமில்லை. மாற்றம் அதிகம் இல்லாதது ஒரு வசதி தான். நாம் ஃப்ரொயோவில் எந்த நிரலி எங்கே இருக்குமென பழகி இருக்க, திடீரென ஒரு நல்லநாளில் நம் செல்பேசிக்கு ஜிஞ்சர் ப்ரட்டை ஊட்டி விட்டு, பின்னர் மொத்த முகப்பும் மாறி இருந்தால் நாம் குழம்பிவிடுவோம். அதனால் தோற்றத்தில் மாற்றங்களைக் கொடுக்காமல் உள்வசதிகளைக் கூட்டி இருக்கிறார்கள். அதில் முக்கியமானது இயங்கு தளத்தின் வேகம். ஆண்ட்ராய்டின் இயங்குதளங்களிலேயே கூடுதல் வேகமுடையது என்ற பெயரை ஜிஞ்சர் ப்ரட் தட்டிக்கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்ட் செல்பேசிகள் வைத்திருப்பவர்களின் பொதுவான புலம்பல் - அதனுடைய மின்கலம் (Battery) மிக வேகமாக தீர்ந்துவிடுவது. என்னுடைய HTC Desire HDல் தினமும் மின்னேற்றம் செய்ய வேண்டும், இல்லையென்றால் அடுத்த நாள் சோம்பிப் படுத்துக்கொள்ளும். இதனாலேயே வீடு, கார், அலுவலகமென எல்லா இடங்களிலும் HTC மின்னேற்றிகளை வைத்திருப்பேன். ஜிஞ்சர் ப்ரட்டில் அதற்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது. ஆண்ட்ராய்ட் செல்பேசிகளில் பொதுவாக நாம் உபயோகப்பத்திவிட்டு மூடிவிட்ட நிரலிகள் (Applications) சமத்தாக ஒரு மூலையில் உறங்கிக்கொண்டு இருக்கும். அப்படி உறங்கும் நிரலிகளுக்கு கொஞ்சம் மின்கலப் பயன்பாடு தேவைப்படும். நிரலிகள் கொஞ்சமாக மின்கலத்தைச் சாப்பிடுவது வரையில் பிரச்சனை இல்லை. ஆனால், ஒரு சில நிரலிகள் உறங்கும்போதும் மலைமுழுங்கிகளாக இருப்பார்கள். அப்படிப்பட்ட மலைமுழுங்கிகளை “தோடா கஸ்மாலம் கம்னு கெட” என்று ஜிஞ்சர் ப்ரட் தலையில் தட்டி உட்கார வைத்துவிடுகிறது.
நிரலிகள் மேலாண்மைக்கென சிறப்பு நிரலி ஒன்று உள்ளது. இதன் மூலம் நிரலிகள் எவ்வளவு இடத்தைத் (Memory) தனக்காக வைத்துக்கொண்டுள்ளது, எவ்வளவு மின்கலத்தைச் சாப்பிடுகிறது எனக் கண்டுகொள்ள முடிகிறது. அதிகமாக இடமெடுத்துக்கொண்டு உறங்கும் நிரலிகளை நீங்களாகவும் துரத்தி அடிக்க முடியும். இந்த வசதியைச் சில தனியார் நிரலிகள் முன்பே கொடுத்து வந்தாலும் இப்பொழுது இதனை இயங்குதளத்தின் அங்கமாக மாற்றி இருக்கிறார்கள்.
தற்பொழுது சந்தையில் இருக்கும் செல்பேசிகளின் திரையை விடப் பெரியத் திரையில் தெளிவாகப் பார்க்கும் அளவிற்கு இயங்குதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பொழுது இருக்கும் திரைகளை விடப் பெரியத்திரை கொண்ட செல்பேசிகள் விரைவில் சந்தைக்கு வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
உணரிகள் (sensors) மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புவியீர்ப்பு உணரி, காற்றழுத்த உணரிகள் சம்பந்தப்பட்ட நிரலிகள் ஜிஞ்சர் ப்ரட் பயணர்களுக்குக் கிடைக்கக்கூடும்.
இது தவிர்த்து மேம்படுத்தப்பட்ட விசைப்பலகை (keyboard), வெட்டி ஒட்டும் வசதி (cut & paste), எளிமைப்படுத்தப்பட்ட கோப்பு மேலாண்மை (File management) ஆகியவை செய்யப்பட்டுள்ளது.
அட வசதிகளைச் சொல்லிக்கிட்டே போறிங்க, குறையொன்றும் இல்லையான்னு கேக்குறிங்களா? இருக்கு. ஆண்ட்ராய்டின் எதிரியான ஆப்பிள் ஐஃபோன் இன்னமும் வெவ்வெவ்வே காட்டிக்கொண்டு இருக்கும் யுனிகோட் தமிழ் எழுத்துகள் ஜிஞ்சர் பிரட்டிலும் வரவில்லை. ஆனால் தேவனகிரி எழுத்துகள் தொடங்கி இன்னும் ஐம்பதிற்கும் மேற்பட்ட எழுத்துருக்களை இணைத்துவிட்டனர். தமிழில் படிக்க விரும்புபவர்களுக்கு இப்பொழுதும் Sett, Opera வலையுலவிகளே (Browser) கதி.
சிறு சிறு குறைகள் இருந்தாலும் இலவச இயங்குதளம், கொட்டிக் கிடக்கும் இலவக நிரலிகளுக்காகவே ஆண்ட்ராய்டைக் காதலிக்கலாம். காதலிப்போம்.
8 மறுமொழிகள்:
//ஆண்ட்ராய்டைக் காதலிக்கலாம். காதலிப்போம்.//
சோகமே உருவான ஆண்டிரியாவை காதலிச்சாலும் காதலிப்போம்...ஆண்ட்ராய்டை காதலிக்க மாட்டோம்..ஏன்னா நாங்க ஆப்பிள் குடும்பம்.
இப்படிக்கு
சித்தார்த்
மீ தி ஆண்ட்ராய்ட் :)
நீங்க எழுதுன அழகுக்காகவாவது ஒரு ஆண்ட்ராய்ட் போன் வாங்க வேண்டும் :)
useful article ....
// யுனிகோட் தமிழ் எழுத்துகள் ஜிஞ்சர் பிரட்டிலும் வரவில்லை. ஆனால் தேவனகிரி எழுத்துகள் தொடங்கி இன்னும் ஐம்பதிற்கும் மேற்பட்ட எழுத்துருக்களை இணைத்துவிட்டனர். தமிழில் படிக்க விரும்புபவர்களுக்கு இப்பொழுதும் Sett, Opera வலையுலவிகளே (Browser) கதி. //
அய்யோ பாவம்!!!
ஒருங்குறித் தமிழ், ஹனிகோம்ப் மற்றும் ஹனிகோம்ப் சாண்ட்விட்ச் உள்ளிட்ட ஆண்ட்ராய்டின் எந்த எதிர்காலத் திட்டத்திலும் இதுவரை இல்லை.
ஆண்ட்ராய்டின் மற்றொரு திறவூற்று வடிவமான சையனோஜென் மாட் யில் கூட தமிழுக்கான நிரல் திட்டம் ஏதுமில்லை
நமக்கு நாமே Bitmapped Font முறையின் துணைகொண்டு இயங்கு தள அளவில் நிரல் மாற்றம் செய்ய திட்டமிட்டால் நல்லது.
typo... ஹனிகோம்ப் சாண்ட்விட்ச் = ஐஸ்க்ரீம் சாண்ட்விட்ச்
நிறைய கலைச்சொற்கள் கற்றுக் கொள்ள முடிகிறது. மற்றபடி விசயம் புரியமாட்டேங்குதே? :)
Post a Comment