எங்க வீடு இருக்கிற வல்லம்படுகைக்கும் தாத்தா (அம்மாவின் அப்பா) வீடு இருக்கிற கொள்ளிடத்துக்கும் ஒண்ணரை கிலோமீட்டர் தூரம் தான். சைக்கிளை எடுத்து ஒரு அழுத்து அழுத்தினா பத்து பதினஞ்சு நிமிஷம், தாத்தா வீடு வந்துடும். அப்பா வழி தாத்தா, ஆயா ரெண்டு பேருமே நாங்க பிறக்கறதுக்கு முன்னாடியே போய்ட்டாங்க. அதனால, எங்களுக்குத் தாத்தா ஆயான்னா அது அம்மா வழி மட்டும் தான். வீட்டுல எதாவது விசேஷமான சமையல்ன்னா அன்னைக்குக் கண்டிப்பா தாத்தாவுக்கு ஒரு கேரியர்ல சாப்பாட்டை எடுத்துக்கிட்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பிச்சிடுவேன். என்னைக்காவது வடை பாயசத்தோட சாப்பாடா இருந்தாலும் சரி, கொஞ்சம் பெரிய மீனு, கோழி, ஆடுன்னு அசைவமா இருந்தாலும் சரி, அது எங்களுக்கு விசேஷ சமையல் தான். தாத்தாவும் மீன்காரர்களிடம் பெரிய மீனாய் பார்த்துட்டா உடனே வாங்கி ”பாப்பாவ சமைக்கச் சொல்லு”ன்னு மாமாவிடம் கொடுத்து அனுப்புவாங்க. தாத்தாவோட நாக்குப்பதம் அம்மா சமையலுக்குத் தான் செட் ஆகும்.
இப்படி விசேஷ சமையல் விஷயத்துல மட்டுமில்ல. தீபாவளின்னா நாங்க எல்லோருமா தாத்தா வீட்டுக்குப் போயிடுவோம். நாங்க சின்னப்பசங்களா இருந்தப்போ அப்பாவுக்குத் தீபாவளி கொண்டாடப் பிடிக்காது. ஏதோ ஒரு காலத்துல திராவிடர் கழகத்துல இருந்த வாசம், தீபாவளில மட்டும் தொடர்ந்துச்சு. தீபாவளி கொண்டாடலைன்னாலும் தீபாவளிக்குக் கிடைக்கிற எல்லாமும் எங்களுக்குப் பொங்கலுக்கு வாங்கி கொடுத்துடுவாங்க. வீட்டுல முறுக்கு அதிரசம்ன்னு பலகாரம், பட்டாசு, புதுத்துணி எல்லாமே பொங்கலுக்குத் தான். வல்லம்படுகைல எங்களை மாதிரியே தீபாவளி கொண்டாடாத ஒரு கூட்டம் இருந்துச்சு. எல்லாமே அதே திக வாசம் தான். அந்தக் கூட்டமும் அப்பா செய்றதைப் பார்த்து பொங்கலுக்குப் பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சிடுச்சு.
பொங்கலன்னைக்கும் சக்கரைப்பொங்கல் மத்த ஐட்டம் எல்லாமே ஒரு கேரியர்ல தாத்தா வீட்டுக்குப் போயிடும். அதே மாதிரி அங்கே இருந்து ஒரு கேரியர் எங்க வீட்டுக்கும் வந்துடும். பொங்கலை விட மாட்டுப்பொங்கல் இன்னும் விசேஷமா இருக்கும். காலையிலேயே மாட்டையெல்லாம் குளிப்பாட்டிட்டு வரணும். வீட்டுல மூணு மாடு இருந்துச்சு. மத்த நாள்ல எல்லாம் வீட்டுலேயே மாட்டைக் குளிப்பாட்டிடுவாங்க. ஆனா மாட்டுப்பொங்கல் அன்னைக்கு மட்டும் கொள்ளிடம் ஆத்துல போய் தான் குளிப்பாட்டணும்ன்னு அப்பா என்னையும் வலுக்கட்டாயமா கூட்டிட்டுப் போவாங்க. இது அப்போ எனக்குச் சுத்தமா பிடிக்காது. உள்ளூர் பள்ளிக்கூடத்துல படிச்சதால, கூடப் படிக்கிற பொட்டப்புள்ளைங்க எதாவது நாம மாடு ஓட்டிக்கிட்டுப் போறதைப் பார்த்துட்டா நம்ம கௌரவம் என்ன ஆகறதுன்னு தோணும். நாங்க போற வழியிலே அதுங்க வீடெல்லாம் இல்லை. அப்படியே ஒண்ணு ரெண்டு கண்ணுல தென்பட்டாலும் நான் கவனிக்காத மாதிரியே தலையக் குனிஞ்சிக்கிட்டுப் போவேன். ஆனா அதுங்க வேணும்ன்னே அப்பாவுக்கு “குட்மார்னிங் சார்”ன்னு சொல்லிட்டுப் போறப்போ எரிச்சல் தான் வரும்.
வீட்டுல ஒரு பக்கம் மாட்டுக்குப் பொங்கல், படையலுக்கான வேலைகள் நடக்கும். இன்னொரு பக்கம் அம்மா மீன், கோழி, ஆட்டுக்கறின்னு வாங்கி சுத்தம் பண்றது, மசாலா அரைக்கறதுன்னு வேலையை ஆரம்பிச்சிடுவாங்க. நான் வெங்காயம் வெட்டிக்கொடுக்கறது, இஞ்சி பூண்டு உறிக்கறதுன்னு சைடு வேலைகள் செய்வேன். மத்தநாளா இருந்தா கறி வறுத்ததுமே மொதோ துண்டு நான் ருசிப்பார்த்துடுவேன். அடுப்புலேர்ந்து இறக்கினதும் சுடச்சுடச் சாப்பிடறதுல அவ்ளோ ருசி. ஆனா மாட்டுப்பொங்கல் அன்னைக்கு மட்டும் அதுக்குத் தடை போட்டுடுவாங்க. வீட்டுச்சாமிக்குப் படைக்கணும்ன்னு சொல்லிடுவாங்க. வீட்டுச்சாமி வேற யாருமில்ல, எங்க அப்பாவப் பெத்த ஆயா தான். வேணும்ன்னே “எங்க ஆயா தான் தனக்குப் படைக்கறதுக்கு முன்னாடி உப்பு காரமெல்லாம் சரியா இருக்கான்னு என்னை டேஸ்ட் பண்ணச் சொன்னாங்க”ன்னு எடுத்துச் சாப்ட்டுடுவேன்.
மாட்டுப்பொங்கல் அன்னைக்கு நான் ரெண்டு ஆட்டுல ஊட்டுன குட்டி மாதிரி. ஆட்டுக்கூட்டத்துல சில ஆட்டுக்குட்டி மட்டும் தன் தாய் ஆட்டுக்கிட்டேயும் பால் குடிச்சிட்டு வேற ஒரு ஆட்டுக்கிட்டேயும் பால் குடிக்கும். அது தான் ரெண்டு ஆட்டுல ஊட்டுன குட்டி. மாட்டுக்குப் படைக்கிற வேலையெல்லாம் இருக்கறதால எங்க வீட்டுல கறிசோறு விருந்தெல்லாம் அன்னைக்கு ராத்திரி சாப்பாட்டுக்குத் தான். ஆனா, தாத்தா வீட்டுல மதியமே படைச்சிடுவாங்க. அதனால, நான் பொறுப்பா மதியம் தாத்தா வீட்டுக்குப் போய் ஒரு கட்டுக் கட்டிடுவேன். சாயந்தரத்துக்கு மேல மாமா, அத்தை, பசங்க எல்லோரும் கிளம்பி வல்லம்படுகை வந்துடுவாங்க. வீட்டுச்சாமிக்குப் படைக்கிற இலை ஒரு ஸ்பெஷல். சோறு போட்டு அன்னைக்குச் செஞ்ச எல்லா அசைவத்திலேயும் கொஞ்சம் கொஞ்சம் வச்சிப் படைப்பாங்க. அதுல என்ன ஸ்பெஷல் இருக்க முடியும்ன்னு கேக்குறிங்களா? மேட்டர் இருக்கு. படையல் முடிச்ச பிறகு அந்த ஐட்டம் எல்லாத்தையும் கலவையா கலந்து பிசைந்து ஆளுக்கு ஒரு உருண்டை அம்மா கொடுப்பாங்க. இந்த முப்பத்தி நாலு வருஷத்துல அப்படி ஒரு டேஸ்ட்டான ஐட்டம் வேற எதுவுமே நான் சாப்பிட்டது இல்லை. அந்தக் கலவை சாதத்துக்கு அத்தனை ருசி இருக்கும்.
படையல் முடிச்சதும் அமோகமா விருந்து நடக்கும். ஏழு மணிக்கு ஆரம்பிச்சா எட்டு எட்டரை மணி வரைக்கும் ஓடும். வயிறு முட்டச் சாப்பிட்டதும் செரிமானத்துக்கு ஆளுக்கு ஒரு கரும்பு. கரும்பு முடிச்சதும் ஒரு பெரிய ஏப்பம் வரும், அதோட வயிறு கொஞ்சம் லேசான மாதிரி இருக்கும். ஒன்பது மணிக்கா எல்லோருமா தாத்தா வீட்டுக்குக் கிளம்புவோம். மாட்டுப்பொங்கல் அன்னைக்கு மாட்டுக்குப் படைக்கறது மட்டுமில்ல, வீட்டுப்பெரியவங்க கிட்டே ஆசிர்வாதம் வாங்கறதும் ஒரு சம்பிரதாயம். அப்பா அம்மா, மாமா அத்தையெல்லாம் தம்பதியா ஆயா தாத்தா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குவாங்க. எங்களை மாதிரி பொடுசுங்க கூட்டம் கூட்டமாவோ தனித் தனியாவோ கால்ல விழுவோம். தாத்தா எல்லோருக்கும் துண்ணூறு (திருநீறு) பூசி விடுவாங்க. ஆயா குங்குமம். இது முடிச்சதும் தாத்தா தன் படுக்கை கிட்டே போய் தலையணையத் தூக்கும்போதெ இங்கே ரகளை ஆரம்பிச்சிடும். பொங்கக்காசு இந்தத் தடவ எவ்ளோ நூறா எரநூறான்னு ஒவ்வொரு சைடுலேர்ந்து குரல் வரும். ஆனாலும் தாத்தா பத்துப் பத்து ரூவா நோட்டா ஒரு கத்தை வச்சிருப்பாங்க. ஆளுக்குப் பத்து. அது பெரிய பணமா கண்ணுக்குத் தெரியும். சம்பாதிக்க ஆரம்பிக்காத வயசுல “என் காசு”ன்னு சொல்லிக்கக் கைல கிடைக்கிற ஒரே பணம் அது தான்.
தாத்தா போய் சேர்ந்துட்டாங்க. குடும்பங்களும் கொஞ்சம் கொஞ்சமா விலக ஆரம்பிச்சிடுச்சு. சின்னச் சின்ன மனவருத்தங்கள் பெரியவங்களை ஆளுக்கு ஒரு திசைக்கு முகம் திருப்பிக்க வச்சிடுச்சு. அவரவர் குடும்பம், குழந்தைகள், குழந்தைகளின் குடும்பம் அப்படின்னு வட்டம் மாற ஆரம்பிச்சிடுச்சு. இப்போ நாங்க எல்லோரும் எங்க அப்பா அம்மா கிட்டே மாட்டுப்பொங்கலுக்கு ஆசிர்வாதம் வாங்கிக்கிட்டுப் பொங்கக்காசு மறக்காம வாங்கிக்கிறோம். சாயந்திரமா ஃபோன் பண்ணா அம்மா “ஃபோன்லேயே கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோடா”ன்னு சொல்லிட்டு “உன் பங்கு பொங்கக்காசு கோமதிகிட்டே கொடுத்துட்டேன்”ன்னு சொல்வாங்க. நமக்கும் ஆசிர்வாதம் வாங்கின முழுமை கிடைச்சிடும். ஆனா, மனசு ஓரத்திலே “இந்நேரம் தாத்தா இருந்திருந்தா இப்படி அப்பா, மாமாக்களெல்லாம் தனித் தனி வட்டமா பிரியாம இந்த வட்டம் பெருசா ஆகி இருக்குமே”ன்னு தோணும். தாத்தா உசுரோட இருந்திருக்கலாம்.
21 மறுமொழிகள்:
பதிவு நல்லாருக்கு. அடிக்கடி எழுதுங்க கேவிஆர்.
அடடா... அருமையான பகிர்வு...
இருப்பதற்காக இழந்தது கொஞ்சநஞ்சமல்ல!
அடுத்த தலைமுறை இப்படிச் சிலாகிக்க என்னயிருக்கிறதென்றும் தெரியல!
@வித்யா - நன்றி
@கதிர் - சின்னச் சின்ன விஷயங்களை ஓரளவுக்கு அடுத்தத் தலைமுறைக்குக் கடத்திக்கிட்டுத் தான் இருக்கோம், பார்க்கலாம். நன்றி
ஒரு நல்ல எழுத்தாளர் இப்படி எப்பனாச்சி எழுதுவது வருத்தத்தை அளிக்கிறது.
இனியாவது தொடர்ந்து எழுதுவார் என எதிர்ப்பார்க்கிறேன்.
நிறைய பழைய நினைவுகள் வந்து போகின்றன ராஜா... பால் பொங்கியாச்சா என மாமன் முறை உள்ள எல்லோரிடமும் கேட்டு காசு வாங்கி, பொங்கலை குதூகலமாய் கொண்டாடும் அந்த நாட்கள்... நினைத்தாலே மனமெல்லாம் பரபரவென்கிறது.... பழயனவற்றை நினைவுறும் போதெல்லாம் நிறைய 'லாம்'-கள் எழும். நல்ல பகிர்வு.
பிரபாகர்...
சுப்பரு போங்க,
அந்தகால பொங்க!
எனக்கும் இதே அனுபவங்கள் உண்டு என்னா?... சாமிக்கு படைக்கிறது மட்டும் செய்யிறது இல்ல, மத்த எல்லாம் இருந்துச்சு,
இப்போ பொங்க ஸ்கைப்பிலும்,
முக நூலிலும், ஐ போனிலும் தான் பொங்குது.
அருமையான
சுகமான,- பழைய
நினைவுகளை மீட்டும் பதிவு.
நோஸ்டால்ஜிக்.
பாண்டிங் மாதிரி ரொம்ப நாள் கழிச்சு ராஜாவின் ஒரு சதம்
பலருக்கும் மனக் குளத்தில் விழுந்த கல் இது. இனி நினைவின் வட்டங்கள் உருவாகிப் பெருகும்.
உணர்வுமிகுந்த இறுதி பத்தி.
//ஒரு நல்ல எழுத்தாளர் இப்படி எப்பனாச்சி எழுதுவது வருத்தத்தை அளிக்கிறது// என்பதையே வழிமொழிகிறேன் வாத்யாரே!
இனிய பொங்கல் வாழ்த்துகள் கே.வி.ஆர்.
//பலருக்கும் மனக் குளத்தில் விழுந்த கல் இது. இனி நினைவின் வட்டங்கள் உருவாகிப் பெருகும்.//
இது தான் கவிஞர் டச்!!!!!!!!!
உண்மைதான் எல்லோரையும் கொசுவத்தி சுத்த வச்சிட்டீங்க :))
ராஜா , மிக அருமையான இடுகை, பல விஷயங்களை யோசிக்க வைக்கிறது,
பண்டிகை என்றாலே உறவுகளின் வீட்டிற்கு சென்றது போக, தொலைகாட்சியின் முன் அமர்ந்து உறவுகளை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இதுவும் பல உறவு சங்கிலிகள் அற்று போக ஒரு காரணம்
நீண்ட நாளைக்குப்பிறகு ராஜாவின் பதிவைப்படித்தேன் அடடா எத்தனை இயல்பா எழுதறீங்க...என்னவோ நானும் கதை எழுதறனேன்னு இருக்கு. மரத்தடிலயே இதுமாதிரி ஒரு பதிவைப்படிச்சிருக்கேன் உங்க எழுத்தில்/
அழகான நினைவலைகள்!
படித்து முடித்ததும் ஒரு பெருமூச்சுதான் வெளிப்பட்டது
பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி ஐயா!
//ஒரு நல்ல எழுத்தாளர் இப்படி//
ராஜாண்ணா, ஏன் இந்தக் கொலவெறி??
@பிரபாகர் - உங்க பொங்கல் அனுபவம் மாதிரியே இருக்குல்ல!!!
@காலக்கிறுக்கன் - நன்றிங்க
//பாண்டிங் மாதிரி //
இப்னு, ஹிஹிஹி மனசிலாயி. சீக்கிரமே ரிட்டயர் ஆகிடுவோம் :-)))
@எல்கே - குறைந்தபட்சம் பண்டிகை நாள்களிலாவது எல்லோரும் ஒண்ணு கூடணும்ன்னு வீட்டுல இருக்கிற பெரியவங்க யாராவது இழுத்துப் பிடிக்கணும்ன்னு தோணுது. கோமதி சைடு உறவினர்கள்ல ஒரு வீட்டுல அவங்க குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரும் மாசம் ஒரு தடவை “நிலாச்சோறு”ன்னு ப்ளான் பண்ணி சந்திக்கிறாங்க. மாசத்துக்கு ஒரு தடவை முடியலைன்னாலும் வருஷத்துக்கு ஒரு முறையாவது இப்படிச் சந்திக்கணும்
@ஷைலஜா - ஏன் இப்படி!!! நன்றி :-)
@அக்பர் - நன்றி மக்கா :-)
@கரிகாலன் - நன்றிங்க. ஐயாவெல்லாம் வேணாம், ரொம்ப வயசான மாதிரி இருக்கு. கேவிஆர்ன்னு கூப்பிடுங்க போதும் :-)
அய்யோ யாரோ கேவிஆர் ஐடியை ஹேக் பண்ணிடாங்க. எழுதிருக்கறதும் இல்லாமல் அது நல்லாவேற இருக்கே :)))
//இப்னு, ஹிஹிஹி மனசிலாயி. சீக்கிரமே ரிட்டயர் ஆகிடுவோம் :-)))//
ராஜா-ஜி,
நீங்க ரஜினிகாந்த் மாதிரி.
பேரன்பேத்தி எடுத்தாலும்
களத்துல இருப்பீங்க.. கலக்குவீங்க.
கலக்கல் தல ;-))
உங்கள் தள்ம் என் விகடன் புதுச்சேரி பதிப்பில் வெளியாகி உள்ளது ... வாழ்த்துகள்
@கோபி - நன்றி :-)
@எனக்குப் பிடித்தவை - பார்த்தேன் நண்பரே, நன்றி
Post a Comment